Published : 31 May 2023 06:21 AM
Last Updated : 31 May 2023 06:21 AM
மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் பிரம்மாண்ட வணிக வளாகம் கட்டி முடித்து 6 மாதங்களுக்கு மேலாகியும், அதனை ஏலம் விட்டு திறக்க நடவடிக்கை எடுக்காததால் மாநகராட்சிக்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.119 கோடியில் 474 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், பணிபுரியும் பணியாளர்களுக்கும் வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் விட்டால் மாநகராட்சிக்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இந்த கடைகள் ஒதுக்கீட்டில் பழைய பெரியார் பேருந்து நிலைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை வெளிப்படையாக பொதுஏலம் விடவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போது வரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதுரை பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள இந்த கடைகள் மாநகரின் முக்கிய வர்த்தகப் பகுதியாக உள்ளது. அருகில் ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் உள்ளன.
பழைய பெரியார் பேருந்து நிலையத்தில் குறைந்த வாடகைக்கு கடைகள் விடப்பட்டிருந்தன. ஆனால், தற்போது பழைய வாடகையை நிர்ணயிக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் கூடுதல் வாடகைக்கு வியாபாரிகள் சம்மதிப்பார்களா என்பது கேள்விக்குறியே.
இந்நிலையில், பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள கடைகளை ஏலம் எடுக்க அரசியல்வாதிகள், வியாபாரிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடைகள் ஒதுக்கீட்டில் ஆளும் கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிக்க அவர்கள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் கடைகளை திறக்க உறுதியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறுகையில், ‘‘பழைய பெரியார் பேருந்து நிலையத்தில் 446 கடைகள் இருந்தன. தற்போது 474 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
பழைய வியாபாரிகளுக்கு முக் கியத்துவம் கொடுத்து அவர்கள் கடைகளை பெற்றால் மீதம் 28 கடைகளே உள்ளன. பெரியார் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை மாநகர் பேருந்துகளே வந்து செல்வதால், உள்ளூர் மக்களே அதிகம் வந்து செல்வார்கள். வெளியூர் பயணிகள், நகரத்தின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கே வருவார்கள். அவர்கள் கடைகளில் ஷாப்பிங் செய்வார்களா என்று சொல்ல முடியாது.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவோர் கடைகளுக்கு வர வாய்ப்புள்ளது. இந்த வணிக வளாக கடை களில் தரைத்தளத்தில் உள்ள கடைகளுக்கு அதிகம் வருவர். மாடியில் உள்ள கடைகளுக்கு ஏறி ஷாப்பிங் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.
அதனால், பழைய வியாபாரிகளே கூடுதல் வாடகைக்கு கடையை எடுக்க முன்வருவார்களா என்பது தெரியவில்லை. அப்படி வராத பட்சத்தில் அந்த கடைகளை அரசியல் கட்சியினர் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. ஏல விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை” என்றனர்.
மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ‘‘வருவாயைப் பெருக்கி மக்களுக்கான அடிப்படை வசதிகளை தொய்வின்றி வழங்குவதே மாநகராட்சியின் முதன்மை நோக்கம். அதன் அடிப்படையில் பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி மற்ற கடைகள் விரைவில் ஏலம் விடப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT