Published : 30 May 2023 04:23 PM
Last Updated : 30 May 2023 04:23 PM
புதுச்சேரி: “மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவசரகதியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்” என்று புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கூறியது: "சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை 2023–24 கல்வியாண்டில் புதுச்சேரி அரசு நடைமுறைக்கு கொண்டு வருவது ஏன்? 1–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்–1–ல் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தினால் 8–ம் வகுப்பு வரை தமிழக பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் 9–ம் வகுப்பை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து அடுத்த கல்வியாண்டில் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை அவர்களால் எப்படி எழுத முடியும். மதிப்பெண்கள் குறையாதா?.
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழை விருப்பப் பாடமாக அறிவித்திருப்பது தமிழை அழிக்க நினைக்கும் பாஜகவின் கொள்கையாகவே இதை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக அறிவித்திருப்பது போல் புதுச்சேரியிலும் அறிவிக்கப்பட வேண்டும். திட்டமிட்டே தமிழை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுவதை திமுக வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ் அழியும் என்பதை புதுச்சேரி அரசு உணர வேண்டும்.
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை மற்றும் பயிற்சி பெற்ற போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் எப்படி சிபிஎஸ்இ கல்வி முறையை முழுமையாக செயல்படுத்த முடியும். தற்போதுள்ள நிலவரப்படி ஆசிரியர் பற்றாக்குறையால் பாதிப்பை நோக்கிப் பயணிக்கும் கல்வி நிலையங்கள் இந்த நடைமுறையை எப்படி எதிர்கொள்ளும்.
பழைய பாடத்திட்டத்தின்படி நடைபெற்ற 2022–23ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள நிலையில் போதிய வசதி, தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் இல்லாதபோது தற்போதைய சூழலில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை ஒரே நேரத்தில் புகுத்துவது மாணவர்களிடையே குழப்பத்தை உருவாக்கும்.
மேலும் மாணவர்களது கல்வி முன்னேற்றத்துக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பதை அரசு உணராமல் அவசரகதியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை புதுச்சேரி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பை நடைமுறையில் பயிலும் மாணவர்களுக்கும், எதிர்கால மாணவ சமுதாயமும் அறிந்து கொள்ள கூடாது என்கின்ற மாற்றாந்தாய் மனப்பான்மையை நீக்கி புதுச்சேரியிலும் தமிழை கட்டாயப்பாடமாக பயிலுவதற்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தமிழை, தமிழர் பண்பாட்டை புகழ்வதுபோல் பாசாங்கு செய்து கொண்டு, தமிழை அழிக்க நினைக்கும் இந்த பாதக நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எல்லா வகையிலும் பாதிப்பை உருவாக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை இக்கல்வியாண்டில் நடைமுறைக்கு கொண்டு வருவதை அரசு கைவிட்டு, படிப்படியாக கொண்டுவர வேண்டும்" என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT