Published : 30 May 2023 03:47 PM
Last Updated : 30 May 2023 03:47 PM
கும்பகோணம்: காலதாமதமாக வழங்கப்பட்ட கரும்புக்கான சட்டபூர்வ விலைக்குரிய வட்டியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அச்சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன், தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழகத்திலுள்ள அரசு பொதுத்துறை கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் 2017-18 முதல் நிகழாண்டு வரை கரும்பு அரவைப் பருவங்களில் அரைக்கப்பட்ட கரும்பிற்கு உரிய மத்திய அரசின் சட்டபூர்வ விலையான நியாயமான மற்றும் லாபகரமான விலையை மட்டுமே வழங்கியுள்ளன.
பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் மேற்கண்ட கரும்பு அரவைப் பருவங்களில் அரைக்கப்பட்ட கரும்புக்குரிய நியாய மற்றும் லாபகரமான விலையினை விவசாயிகளுக்கு கரும்பு கட்டுப்பாடு ஆணை 1966 விதிகளின்படி 14 நாட்களுக்குள் பணத்தை வழங்கவில்லை. மேலும், ஒரு சில தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 14 நாட்களுக்குப் பிறகு கரும்புக்கான விலைகளை மட்டுமே வழங்கியுள்ளன.
கரும்பு கட்டுப்பாடு ஆணையின்படி, 14 நாட்கள் கடந்து காலதாமதமாகக் கரும்பபுக்கு வழங்கப்பட்ட தொகைக்கு 15 சதவிகித வட்டி வழங்கப்பட வேண்டும் என்ற விதிகளைத் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் பின்பற்றவில்லை. எனவே, 2017-18 கரும்பு அரவைப் பருவம் முதல் 2022-23 கரும்பு அரவை பருவம் வரை அரைக்கப்பட்ட கரும்பிற்கு நியாயமான லாபகரமான விலையை, காலதாமதமாக வழங்கியதற்கு,15 சதவிகித வட்டியுடன், தமிழகத்திலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்" என மனுவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT