Published : 30 May 2023 03:04 PM
Last Updated : 30 May 2023 03:04 PM
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் மாதம் 7-ம் தேதி திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
கோடை வெயிலின் தாக்கத்தால் புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளின் முழு ஆண்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டது. முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தி விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் ஜூன் 1 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக விடுமுறை ஒரு வாரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரியிலும் பள்ளி விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தன.
இது குறித்து புதுச்சேரி கல்வித்து றை அமைச்சர் நமச்சிவாயம் இன்று கூறியதாவது: "பள்ளி விடுமுறை ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி மீண்டும் பள்ளிகள் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் திறக்கப்படும்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு விதிமுறைகளை தளர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். இதையேற்று புதுச்சேரியில் உள்ள 127 அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளுக்கு பாடபுத்தகம் அனுப்பி வைத்துள்ளோம். புதுச்சேரிக்கு ஒரு பகுதி புத்தகம் வந்துள்ளது. நாளை அனைத்து புத்தகங்களும் வந்து விடும்.
பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் விநியோகிக்கப்படும். ஏற்கெனவே இலவச சீருடை, சைக்கிள் ஆகியவற்றை அரசு வழங்கி வருகிறது. ஒன்றரை மாதத்திற்குள் இலவச லேப்டாப் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பாடத்தில் படிக்க வைக்க விரும்புகின்றனர். அகில இந்திய தேர்வுகளான நீட், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சியடைய சிபிஎஸ்இ பாடம் அவசியமாகிறது.
சிபிஎஸ்இ பாடங்களை எடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி வழங்குகிறோம். இந்த பயிற்சி தொடரும். புதிய இடமாற்ற கொள்கை குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஒரு சில மாற்றங்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆலோசித்து இடமாற்றல் கொள்கை முடிவு செய்யப்படும். பள்ளி திறக்கும் முன்பே ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
ஆரம்ப பள்ளிக்கு 146 ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளோம். அது மதிப்பெண் அடிப்படையிலா, தேர்வு முறையிலா என்பது குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்படும். ஆசிரியர்கள் விரைவில் பணிக்கு எடுக்கப்படுவார்கள்.
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக பெற்றோர்கள், மாணவர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அந்த நிறுவனத்துடன் குறிப்பிட்ட சில ஆண்டுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதை நிறுத்துவதால் சட்ட சிக்கல் வருமா? என ஆலோசித்து வருகிறோம். முட்டை, சிறுதானிய உணவு வழங்க அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார். பேட்டியின் போது கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT