Published : 30 May 2023 02:25 PM
Last Updated : 30 May 2023 02:25 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கூட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் விநியோகம் பாதிக்கப்படுவதாக நகராட்சித் தலைவர் பதிலளித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. நகராட்சித் தலைவர் ரவிகண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வமணி, ஆணையர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். திமுக கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், ராஜாமான்சிங், சுரேஷ் ஆகியோர் பேசுகையில், “நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் முறையாக வழங்கப்படாததால் 20 நாட்கள் வரை சேமித்து வைக்கப்படும் குடிநீரில் புழுக்கள் உருவாகி நோய் தொற்று பரவும் சூழல் நிலவுகிறது. குடிநீர் வடிவத்தை முறைப்படுத்தி வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.அதன்பின் நடந்த விவாதம்:
நகராட்சி தலைவர் ரவிகண்ணன்: “வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் விநியோகம் பாதிக்கப்படுகிறது. பிரச்சினைகளை சரி செய்து அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”
சிவகுமார் (தி.மு.க): “தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் தனியாக செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.”
சுகாதார அலுவலர் ராமச்சந்திரன்: “சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
துணைத் தலைவர் செல்வமணி: “நகராட்சி பள்ளிகளில் உள்ள சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.”
சுகாதார அலுவலர்: “பள்ளிகள் திறக்கும் முன் நகராட்சி பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.”
இக்கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நேற்று மாலை தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு தற்போது குறைந்த அளவு குடிநீர் வழங்கப்படுவதால் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது. ஒப்பந்தப்படி சரிவிகித அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் நகராட்சி தலைவர் ரவிகண்ணன் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT