Published : 30 May 2023 07:05 AM
Last Updated : 30 May 2023 07:05 AM
ஸ்ரீஹரிகோட்டா: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் மாதிரி விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஜூலையில் நடத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இதற்கு முந்தைய ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் ஏவுதல் கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்ட கசிவால் தோல்வியில் முடிந்தது. அதில் கிடைத்த அனுபவங்களின்படி பல்வேறு மாற்றங்கள் செய்து ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் ஏவுதலை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
இதையடுத்து, பருவநிலை மாறுபாடு குறித்து ஆராய்ச்சிக்கான இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதேபோல, இஸ்ரோ-நாசா கூட்டிணைப்பில் தயாராகி வரும் வானிலை கண்காணிப்புக்கான நிசார் செயற்கைக்கோள் ஏவுதல்திட்டம் 2024-ம் ஆண்டில் செயல்படுத்தப்படும். தொடர்ந்து ககன்யான், மீண்டும் பயன்படுத்தப்படும் ராக்கெட் உட்பட பல்வேறுதிட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், சந்திரயான்-3 திட்டம் ஜூலையில் செயல்படுத்தப்பட உள்ளது.
குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்காக 99 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து தனியார் ராக்கெட்களை வர்த்தக ரீதியில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளது. அந்த பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும். மனிதனை விண்ணுக்கு அனுப்பும்ககன்யான் திட்டத்தில் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மாதிரி விண்கலம் ஒன்றை புவியில் இருந்து 14 கி.மீ.தூரம் வானத்தில் அனுப்பி பாதுகாப்பாக தரையிறக்கும் சோதனைவரும் ஜூலையில் நடத்தப்படஉள்ளது. இவை சாதகமாக அமைந்தால் அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
துல்லியமான தகவல்கள்...: நாவிக் செயற்கைக்கோள்களின் மூலமே தெற்காசியப் பகுதிகளின் கடல் மற்றும் எல்லைப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மலைப் பகுதிகள், பாலைவனங்கள் போன்ற தகவல் தொடர்பு வசதியற்ற பகுதிகளில் ஜிபிஎஸ் முழுமையான தகவல்களை தராது. ஆனால், தெற்காசிய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 20 மீட்டர் தூரத்துக்கு துல்லியமான தகவல்களை நாவிக் தொழில்நுட்பம் வழங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT