

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரி, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஊழல், கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறியும், அதற்குப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக சார்பில் சென்னை நீங்கலாக, தமிழகம்முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் தொடரும் ஊழல், முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதற்குக் காரணமான திமுகஅரசைக் கண்டித்தும், இவைகளுக்கு முழுப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலகக் கோரியும்,சென்னை தவிர, அனைத்துமாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்தில் ஊழல், மக்கள்விரோதச் செயல்கள் தொடர்ந்தால், அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டில் பா.வளர்மதி, திருவள்ளூரில் ரமணா, மதுரவாயிலில் பா.பெஞ்சமின், திருவொற்றியூரில் மாதவரம் மூர்த்தி, நாமக்கல்லில் தங்கமணி, திண்டுக்கல்லில் சீனிவாசன், பொள்ளாச்சியில் எஸ்.பி.வேலுமணி, ஜெயராமன், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி, விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், மதுரை வாடிப்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.