Published : 07 Oct 2017 01:38 PM
Last Updated : 07 Oct 2017 01:38 PM
திண்டுக்கல் பகுதியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் அடுத்தடுத்து பலியாகி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. வறட்சி காலத்திலேயே, பழநி பகுதி மக்களை வாட்டி வதைத்த காய்ச்சல், தற்போது மழைக் காலத்திலும் விட்டு வைக்காமல் தொடர்கிறது. பழநி பகுதியை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காய்ச்சலால் மக்கள் பாதிப்புக்குள்ளாக தொடங்கி உள்ளனர்.
பலியாகும் மாணவர்கள்
உலகம்பட்டியைச் சேர்ந்த சூசைராஜ் மகள் செர்லின்பவிஸ்கா (9). அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவர் டெங்கு காய்ச்சலால் பலியானார். கன்னிவாடி அருகே குட்டுத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த தோமையார் மகன் ஆல்பர்ட் (13). காய்ச்சல் பாதிப்பால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவரும் பலியானார். இந்த இரண்டு இறப்புகளும் நேற்று முன்தினம் நடந்தன.
சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டி நாகராஜன் மகள் பூஜா (9). 3-ம் வகுப்பு மாணவி. இவர் டெங்கு பாதித்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு வேடசந்தூர், நெய்க்காரப்பட்டி பகுதிகளிலும் காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில் பெரும்பாலானோர் மாணவர்கள்.
திணறும் அரசு
மருத்துவமனைகள்
திண்டுக்கல் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 700 பேருக்கு மேல் காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போதிய இடவசதி இல்லாததால் உள்நோயாளிகளுக்கு படுக்கைவசதியை ஏற்படுத்தி தர முடியவில்லை. காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவர்கள் முனைப்புடன் செயல்பட்டுவரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகிறது.
விரைவில் கட்டுக்குள் வரும்
மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மாலதி கூறியதாவது: அரசு மருத்துவர்கள் அனைவரும் முழுவீச்சில் பணிபுரிந்து வருகின்றனர். லேசான காய்ச்சல் கண்ட முதல்நாளே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதிப்பு விரைவில் கட்டுக்குள் வர அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறையால் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT