Published : 30 May 2023 12:27 AM
Last Updated : 30 May 2023 12:27 AM
மதுரை: தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதுரையில் ‘தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த பேராசிரியர் எல்.ஜவகர் நேசன் இதில் பங்கேற்றார். சில முரண்பாடு காரணமாக அதிலிருந்து விலகிய, அவர் முன்னதாக கல்விக் குழு தலைவரிடம் அளித்த வரைவுக் குழு நகல் அறிக்கையை மேலும் செழுமைப்படுத்தி புதிய அறிக்கை தயாரித்துள்ளார். அதுபற்றி மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில் இந்த அரங்கக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் ஜவகர் நேசன் பேசியது: "உலகம் முழுவதிலுமிருந்து 113 சிறந்த கல்வியாளர்களைத் தேர்வு செய்து அவர்களுடன் விவாதித்து வரைவுக் கொள்கை உருவாக்கப்பட்டு குழுத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முதல்வரின் தனிச்செயலர் விரும்பும் வகையில் அவர் சொல்லும் குழுவுக்கு சம்பந்தப்படாத சிலரின் ஆலோசனையை ஏற்று அறிக்கை தயாரிக்க, அழுத்தம் கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வருக்கும் அது தொடர்பாக விளக்கி அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 250 பக்க அறிக்கைக்கு எந்த பதிலும் இல்லாத சூழலில் பொறுப்பு விலகினேன்.
'புதிய கல்விக் கொள்கையானது அறிவியல் பூர்வமான, ஜனநாயக அடிப்படையில் தொலை நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வணிக நோக்கம் கொண்ட தனியார் கொள்ளைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தேசிய கல்விக் கொள்கையை உள்வாங்கிய ஒன்றாக அது இருந்தால் போதும் என வழிகாட்டப்பட்டது. இப்படியொரு கொள்கை தயாரித்தால் தற்போது நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கையால் அது பல்வேறு முரண்பாடுகளுடன், சிக்கல்களைச் சந்தித்து வரும் மாணவர்கள் சமுதாயத்தை வளர்க்கவோ, புதிய முற்போக்கான, அறிவியல் சார்ந்த சமூகத்தைப் படைக்கவோ ஒருபோதும் உதவாது.
தமிழ் சமூகம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் புதிய கல்வி கொள்கையை உருவாக்கும் நோக்குடன் உழைக்கிறேன். இப்போது வெளியிடப்படும் இந்த அறிக்கை போதாமையுடன் இருக்கிறது. இதை மேலும் செழுமைப்படுத்தும் பணி தொடர்கிறது. அதற்கு கல்வி வல்லுநர்கள் பலர் ஒத்துழைக்கின்றனர். மதுரையில் கிடைக்கும் ஆதரவு எனக்கு உற்சாக மூட்டுகிறது. இப்பணியை விரைந்து முடிக்கவும் மக்களிடம் கொண்டு செல்லவும் வேண்டும்" என்றார்.
முன்னதாக 257 பக்கங்கள் கொண்ட அறிக்கை நூல் வெளியிடப்பட்டது. மதுரை பல்கலைக் கழக ஆசிரியர் சங்க (மூட்டா) முன்னாள் பொதுச் செயலர் பேராசிரியர் விஜயகுமார் வெளியிட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மதுரை மாவட்டச் செயலர் லயனல் அந்தோணிராஜ் பெற்றார். காமராசர் பல்கலை பாதுகாப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் அ.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி உள்ளிட்டோர் பேசினர். பேராசிரியர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT