Published : 29 May 2023 06:56 PM
Last Updated : 29 May 2023 06:56 PM
புதுச்சேரி: “செங்கோல் பற்றி சொல்பவர்கள் அதன் உண்மைத் தன்மை புரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோயிலில் 186-வது குரு பூஜை விழா இன்று நடைபெற்றுது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழின் செல்கோலுக்கு இவ்வளவு மரியாதை, அங்கீகாரம் கொடுத்த பிறகு தமிழகத்தில் இருந்து யாரும் புறக்கணித்திருக்கக் கூடாது. இதில் எதிர்கட்சியினர், சில அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர்.
தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் என நினைத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், வாக்கிங் ஸ்டிக்காக முடங்கி சிறுமைப்பட்டு இருந்ததை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்று கூறியுள்ளார். அவர் இப்படி பேசுவது சரியானதல்ல. எவ்வளவு மாற்றுக் கருத்து இருந்தாலும், தமிழர்களின் செங்கோலை அரசியலாக்கி இருக்கக் கூடாது. இப்படி ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் செங்கோலின் அருமை பெருமை மறைந்து போயிருக்கும்.
எந்த மாநிலத்துக்கும், எந்த மொழிக்கும் கிடைக்காத மரியாதை நமக்கு கிடைத்திருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் காலை தமிழ் மட்டுமே ஒலித்தது. தமிழ் ஆதீனங்கள் மட்டும்தான் அங்கு இருந்தனர். அவர்களுக்கு கிடைத்த மரியாதை தமிழுக்கு கிடைத்த மரியாதை. மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட தமிழ் மாநிலத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து மகிழ்கின்றனர்.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புக் கொடி காட்டுகின்றனர். ஏற்றுகின்றனர். கள்ளச் சாராய மரணங்கள் வரும்போது கருப்புக் கொடி ஏற்றவில்லை. தமிழர்களின் அடையாளம் நிலைநாட்டும்போது கருப்புக்கொடி ஏற்றுகின்றனர். அப்படியானால் இவர்களின் அடையாளத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். திருவள்ளுவர் கூட செங்கோல் என்பது மக்களாட்சியின் ஓர் அடையாளம் என்று சொல்லியிருக்கிறார். ஆகவே, செங்கோல் பற்றி சொல்பவர்கள் எல்லோரும் அதன் உண்மைத் தன்மை புரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்” என்றார்.
அப்போது புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அதிகாரிகள் அதைப்பற்றி சொல்வார்கள். நாராயணசாமி சொல்லிய குற்றச்சாட்டுக்கு நான் சிரிக்கத்தான் செய்வேன்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT