Published : 29 May 2023 06:20 PM
Last Updated : 29 May 2023 06:20 PM
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் தனியார் திரையரங்கில் ‘பப்ஸை’ பூனை சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அங்கு உணவுப் பொருட்கள் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.
காரைக்குடி மகர்நோம்பு பொட்டல் பகுதியில் சத்தியன் திரையரங்கு உள்ளது. இந்த திரையரங்கில் இரு தினங்களுக்கு முன்பு, உணவுப் பொருட்கள் விற்கும் இடத்தில் ‘பப்ஸை’ பூனை ஒன்று ருசி பார்த்துக் கொண்டிருந்தது. இதை திரைப்படம் பார்க்க வந்திருந்த ரசிகர் ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திரையரங்கில் சோதனையிட்டனர். அப்போது காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து திரையரங்கில் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து 2 கேன்டீன்களையும் மூடினர்.
இதுகுறித்து பிரபாவதி கூறும்போது, “பப்ஸை பூனை சாப்பிடும் வீடியோ அந்த திரையரங்கில் எடுத்தது என்பது உறுதியானது. மேலும், காலாவதியான உணவுப் பொருட்களையும் விற்பனை செய்து வந்துள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளேன். விரைவில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT