Published : 29 May 2023 05:25 PM
Last Updated : 29 May 2023 05:25 PM
புதுச்சேரி: புதிய நாடாளுமன்றம் திறப்பின்போது தமிழின் கலாசாரம் முன்னிலைப்படுத்தப்பட்டது என்றும், அது தமிழர்கள் அனைவருக்குமான கவுரவம் என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் மயம் குறித்து காங்கிரஸ் பேசுவது சரியல்ல என்று அவர் கூறினார்.
இது குறித்து அவர் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியது: "2004-ல் இருந்து 2014 வரை இந்த நாடு பின் தங்கியிருந்தது. 2 ஜி, காமன்வெல்த், நிலக்கரி என தினந்தோறும் ஊழல்கள்தான். இப்படிப்பட்ட தருணத்தில் 2014-ல் பிரதமராக நரேந்திர மோடி வந்த பிறகு 9 ஆண்டுகளில் இந்த நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைத்திருக்கின்றது. இந்த 9 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை, மகளிருக்கு மலிவு விலையில் சானிட்டரி பேடு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தேசிய அளவில் 4 கோடி வீடுகளும், புதுச்சேரியில் 14 ஆயிரம் வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி நாடு முழுவதும் 220 கோடி டோஸ்களும், புதுச்சேரிக்கு 22 லட்சத்து 74 ஆயிரம் டோஸ்களும் கொடுத்துள்ளோம். ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடி தண்ணீரை பிரதமர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ரூ.100-க்கு திட்டம் போட்டால் ரூ.15 தான் மக்களுக்கு சென்று சேருகிறது என்றார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ரூ.100-க்கு திட்டம் போட்டால் ரூ.100-ம் பயனாளிகளுக்கு சென்று சேருகிறது.
நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6,000 கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். புதுச்சேரியில் 11 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர். உஜ்வாலா திட்டத்தின்கீழ் இந்தியாவில் 9 கோடியே 58 லட்சம் பேருக்கும், புதுச்சேரியில் 15 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஏழை மக்கள் உயர்ரக சிகிச்சை பெறும் ஆயுஷ்மான் திட்டத்தில் தேசிய அளவில் 15 கோடி பேருக்கும், புதுச்சேரியில் 25 ஆயிரம் பேருக்கும் வழப்பட்டுள்ளது. கரோனா நேரத்தில் அனைவருக்கும் உணவளிக்கும் வகையில் 80 கோடி பேருக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வரும் டிசம்பர் மாதம் வரை ரேஷனில் கொடுகின்றோம்.
ஓராண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பின் போது தமிழின் கலாசாரம் முன்னிலைப்படுத்தப்பட்டது; தமிழர்கள் அனைவருக்குமான கவுரவமாகும். காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் என நாடெங்கும் தமிழின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.
பிரதமரின் செயல்பாட்டால் வரும் 2047-ம் ஆண்டில் நம் நாடு மிகப்பெரிய வளர்ச்சியடைந்ததாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரஸ் தற்போது பாஜக அரசு மீது குறை காணமுடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவது தொடங்கியது. ஆகவே, தற்போது தனியார் மயம் குறித்து காங்கிரஸ் பேசுவது சரியல்ல" என்றார்.
தொடர்ந்து பாஜக தேசியச் செயலர் சத்தியகுமார் மின்னணு திரை காட்சியுடன் பாஜக மத்திய அரசு சாதனையை விளக்கினார். அப்போது புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார், எம்பி செல்வகணபதி மற்றும் எம்எல்ஏக்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...