Published : 29 May 2023 10:47 AM
Last Updated : 29 May 2023 10:47 AM
மதுரை: மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தான் 150 வயது வரை உயிருடன் இருப்பேன் எனவும், அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் அருகே, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தீர்மான விளக்கப் பொதுக்குழு கூட்டம் நேற்று (மே 28) நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான சமக தொண்டர்கள் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது:
உங்கள் தலைவர், உங்கள் நாட்டாமை 2026 தேர்தலில் அரியணை ஏறவேண்டும் என்று சமக பொதுக்குழு தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் அது சாத்தியமா என்று தேர்தலில்தான் தெரியவரும். அதற்கெல்லாம் முயற்சி, நேர்மை, உடல் வலிமை, மனவலிமை இருக்க வேண்டும். நாம் போராட்டம் எதற்காக நடத்துகிறோம் என்பதை உணர்ந்து நடத்தினால் வெற்றி கிட்டும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறந்த கல்வி என்று சொல்வேன். அறிவு, ஆற்றல் படைத்தவர்கள் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கின்றனர். அப்படி இருந்தும் ஏன் இந்த தடுமாற்றம்? மதுவை ஒழிப்போம் என்று சொன்னால் அதில் அரசியல் கட்சிகள் உறுதியாக இருக்க வேண்டும்.
எனக்கு வயது 69 ஆகிறது. 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் இப்போதும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அப்படி என்னால் இருக்க முடியும். அதற்கான வித்தையை நான் கற்று வைத்திருக்கிறேன். அந்த வித்தையை 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் என்னை அரியணையில் ஏற்றும்போது சொல்வேன்.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT