Published : 29 May 2023 05:27 AM
Last Updated : 29 May 2023 05:27 AM
தூத்துக்குடி: நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு வலப்புறத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த மாதிரி செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நிறுவினார். தமிழகத்தைச் சேர்ந்த சைவ மடங்களின் ஆதீனங்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் ஆன்மீக, சமய தொண்டாற்றி வரும் பழமையான சைவ ஆதீன மடங்கள் பல உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் செங்கோல் ஆதீனம், பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் வழங்கும் உரிமையை பெற்று விளங்கியதால் 'செங்கோல் ஆதீனம்' என பெயர் பெற்றது.
ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ள பெருங்குளம் ஒரு வைணவ தலமாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்யதேசங்களுள் ஒன்று. பாண்டிய நாட்டுபதிகள் 18-ல் ஒன்று. உக்கிரவழுதீஸ்வரர் கோயில் என்றசிவன் கோயில் இங்குள்ளது. வைணவ தலமான பெருங்குளத்தில் பழமையான சைவ மடம் அமைந்திருப்பது தனிச் சிறப்பு.
ஆதி முனிவர் சத்தியஞான தரிசினி தில்லையில் மடம் நிறுவி, தனக்கு கடவுள் அருளால் கிடைத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துவழிபட்டு வந்தார். அவருக்கு பின் வழிவழியாக 18 மடாதிபதிகள் வந்தனர். 18-வது மடாதிபதி திகம்பர சித்தர். இவர் காலத்தில், கொற்கையை தலைநகராக கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னர், சிதம்பரத்துக்கு நடராஜரை தரிசனம் செய்வதற்காக வருகிறார். அப்போது திகம்பர சித்தரையும் தரிசிக்கிறார். தன்னுடன் பாண்டிய நாட்டுக்கு வந்து தங்கி அருள்புரியுமாறு மன்னர் வேண்ட, சித்தரும் பாண்டிய நாடு வருகிறார். கல்லூர் எனும் ஊரில் பாண்டிய மன்னர் அமைத்து கொடுத்த திருமடத்தில் தங்கி தெய்வப் பணியும், சைவப் பணியும் ஆற்றினார்.
செங்கோல் ஆதீனம்
சில காலத்துக்கு பின் படையெடுப்பின் மூலம் பாண்டிய நாட்டின் தலைநகர் கொற்கையை சோழர்கள் கைப்பற்றினர். தோல்வியுற்ற பாண்டிய மன்னர், திகம்பர சித்தரை சந்தித்தார். சித்தரின் ஆசியால் பாண்டிய மன்னர் மீண்டும் போர்தொடுத்து வென்றார். வெற்றி பெற்ற மன்னர், பெருங்குளத்தில் சித்தருக்கு ஆதீனம் அமைத்துக் கொடுத்தார். சித்தரின் ஆசியோடு மீண்டும் ஆட்சியை தொடங்கிய பாண்டிய மன்னர், சித்தரின் திருக்கரங்களால் செங்கோலை பெற்றுக் கொண்டார். அப்போது முதல் கொற்கைபாண்டிய மன்னர்கள் முடிசூடும்போது பெருங்குளம் மடாதிபதிகளிடம் இருந்து செங்கோல் பெற்றுக்கொள்ளும் வழக்கம் உண்டாயிற்று. இதனால் ஆதீனத்துக்கும் செங்கோல் ஆதீனம், செங்கோல் மடம் என்ற பெயர் உண்டாயிற்று என வரலாறு கூறுகிறது.
இடையில் சுமார் 35 ஆண்டுகள் குரு இல்லாமல் ஆதீன நிர்வாகம் ஸ்தம்பித்திருந்த நிலையில், திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-வது பட்டமாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சிவப் பிரகாச தேசிகர் முயற்சியால் பெருங்குளம் செங்கோல் மடத்தின் 102-வது மடாதிபதியாக பேச்சியப்பனார் நியமிக்கப்பட்டு, ஸ்ரீலஸ்ரீ கல்யாண சுந்தர சத்திய ஞான பண்டார சந்நிதிகள் என்ற திருப்பெயருடன் மடத்தை திறம்பட நிர்வகித்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பரிபூரணம் அடைந்தார்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்த சுப்பிரமணிய தம்பிரான் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள், மடத்தின் 103-வது செங்கோல் ஆதீனமாக பட்டம்பெற்று திருப்பணி ஆற்றி வருகிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் நிகழ்வில் பங்கேற்று ஆசி வழங்கியுள்ளார்.
2,000 ஆண்டு பழமையானது
டெல்லியில் இருந்த பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியிருப்பது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. மன்னர்களுக்கு ஆதீனங்கள் ஆன்மீக குருவாகவும், நல்லாட்சி செய்ய வழிகாட்டியாகவும் இருந்துள்ளனர். இந்த செங்கோல் முன்பேநாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இந்தியா வல்லரசு ஆவதற்கான தொடக்கமாகவே இந்த செங்கோல் நிறுவுதலை பார்க்கிறேன். இந்த விழாவில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
சாஸ்டாங்கமாக வணங்கிய பிரதமர்
ஆதீனங்களை மிக சிறப்பாக வரவேற்று கவுரவப்படுத்தினார்கள். பிரதமர் மோடி மிக எளிமையாக எங்களிடம் பழகினார். பிரதமர் சாஷ்டாங்கமாக விழுந்துசெங்கோலை வணங்கினார். இதன் மூலம், தான் ஒரு சிறந்த ஆன்மீகவாதி என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.
பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. கொற்கை பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் வழங்கிய பெருமைக்குரியது. பெருங்குளம் செங்கோல் ஆதீனம் மூலம் சமயப் பணி மற்றும் சமுதாயப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இவ்வாறு பெருங்குளம் செங்கோல் ஆதீனம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT