Published : 29 May 2023 05:55 AM
Last Updated : 29 May 2023 05:55 AM

எடை குறைந்த, துருப்பிடிக்காத நவீன ரக சிலிண்டர்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் எடை குறைந்த, துருப்பிடிக்காத நவீன வடிவம் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.

நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது.

வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய ‘காம்போசிட்’ சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சிலிண்டர் பாலிமர் ஃபைபர் கிளாஸ், அதிக அடர்த்தி வாய்ந்த பாலி எத்திலின் தெர்மோ பிளாஸ்டிக்காலான வெளிப்புற ஜாக்கெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உறுதித் தன்மை கொண்ட இந்த சிலிண்டர், வாயுகசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது பயன்பாட்டில் உள்ள இரும்பிலான உருளையை ஒப்பிடுகையில் இந்த சிலிண்டர் 50 சதவீதம் எடை குறைவானது. எனவே, பெண்களே இந்த சிலிண்டரை எளிதாக கையாள முடியும். அத்துடன், இந்த சிலிண்டர் துருப்பிடிக்காது. இப்புதிய சிலிண்டரை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 பாதுகாப்புவைப்புத் தொகையாக (செக்யூரிட்டி டெபாசிட்) செலுத்த வேண்டும்.

பழைய வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய காப்புத் தொகையுடன், புதிய பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அத்தொகையை செலுத்தினால் போதுமானது. மேலும், புதிய சிலிண்டர்களை பெற முன்பதிவு செய்ய 86556 77255 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x