Published : 29 May 2023 06:04 AM
Last Updated : 29 May 2023 06:04 AM
சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளை சரிசெய்து 500 எம்பிபிஎஸ் இடங்களை காத்திட வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவேடு சரியாக இல்லை. சிசிடிவி கேமரா பதிவுகளும் சரியாக இல்லை என்ற காரணத்தால், 3 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் வந்துள்ளது.
இதனால், 3 கல்லூரிகளில் 500 எம்பிபிஎஸ் இடங்களுக்கு நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்தமுடியாமல் போய்விடுமோ என்ற கவலை எழுந்துள்ளது. சிறு குறைபாடுகளை எளிதில் சரி செய்ய முடியும். அதற்காக, அங்கீகாரம் ரத்து என்பது சரியான முடிவல்ல. இது உள்நோக்கம் கொண்டது.
பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. போதிய பேராசிரியர்கள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, நோயாளிகளே இல்லாமலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடைபெறுகின்றன. இந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எப்படி திறமையான மருத்துவர்களாக திகழ முடியும். இத்தகைய மருத்துவக் கல்லூரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் தேசிய மருத்துவ ஆணையம் எடுப்பதில்லை.
சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: இந்நிலையில், தமிழக அரசின் 3 மருத்துவக் கல்லூரிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு, சிசிடிவி குறைபாடுகளை காரணம் காட்டி அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவு என்பது தேசிய மருத்துவ ஆணையத்தின் மீது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே தேசிய மருத்துவ ஆணையத்தால் மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. மத்திய சுகாதாரத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. அரசியல் உள் நோக்கத்தோடு, தமிழக அரசுக்கு எதிரான போக்கு உள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கருத்தை தமிழக அரசும் வெளியிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளை ஒழுங்குபடுத்துவதாகக் கூறிக்கொண்டு, அரசு மருத்துவக் கல்வி இடங்களை ரத்து செய்வது ஏற்புடையதல்ல. சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் உள்ளது. ஆகவே மருத்துவமனைகளை நடத்துவது, மருத்துவர்களை உருவாக்குவது, செவிலியர்களை உருவாக்குவது போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
மருத்துவக் கல்வியை முறைப்படுத்தும் அதிகாரம் மாநில மருத்துவக் கவுன்சில்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு கூட்டமைப்பாக மட்டுமே தேசிய மருத்துவ ஆணையம் போன்ற அமைப்புகள் இருக்க வேண்டும். அதுவே மாநில சுயாட்சிக்கும், கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும்.
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பறிபோகும் ஆபத்தில் உள்ள 500 எம்பிபிஎஸ் இடங்களை காத்திட வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும். பேராசிரியர்கள் பற்றாக்குறையை போக்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை அவ்வப்போது முறையாக நிரப்பிட வேண்டும். இவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT