Published : 29 May 2023 06:17 AM
Last Updated : 29 May 2023 06:17 AM

போக்குவரத்து ஊழியர் சேமிப்பு தொகைக்கு 8% வட்டி: பணியாளர் கடன் சங்கம் அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களின் சேமிப்பு தொகைக்கு 8 சதவீத வட்டிவழங்கப்படும் என்று போக்குவரத்து பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு கடன் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

சம்பளத்தில் பிடித்தம்: சென்னையில் உள்ள போக்குவரத்து பணியாளர்கள் சங்கத்தில் சென்னை மாநகரபோக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தில் அவர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளதோடு, தங்கள் சொந்த செலவுக்கு கடனும் பெற்று வருகின்றனர். அவர்களது கடனுக்கான தவணை தொகையை சம்பளபணத்தில் இருந்து வசூலிக்கவழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடனுக்கான வட்டி: அந்த வகையில், கடன் சங்கஉறுப்பினர்களின் சேமிப்பு தொகையான சிக்கன நிதியின் 2022-23-ம் ஆண்டுக்கான வட்டியை 8 சதவீதமாக கணக்கிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், சங்கத்தில் கடன்பெற்று தவணை செலுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மாதம் கடனுக்கான தொகையில் வட்டியை கழித்து எஞ்சிய தொகை பிடிக்கப்படும்.

கடனுக்கான பிடித்தத்தைவிட வட்டி கூடுதலாக இருந்தால் ரூ.750 பிடிக்கப்படும். எஞ்சியுள்ள வட்டித் தொகை ஜூன் 1-ம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதுகுறித்த விவரங்களை ஜூன் 1-ம் தேதி முதல் சங்கத்தில் நேரில் வந்து அறிந்து கொள்ளலாம்.

ஆதார் எண், குடும்ப அட்டை: நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உறுப்பினர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை எண் கட்டாயம் என்பதால், அதன் விவரங்களை சமர்ப்பிக்கவும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x