Published : 28 Oct 2017 09:15 AM
Last Updated : 28 Oct 2017 09:15 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் கந்துவட்டியால் நடைபாதை வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் போலீஸுக்கும் அதிகாரிகளுக்கும் மாமூல் தரவேண்டிய நிர்பந்தம் உள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஏழை, நடுத்தர தொழிலாளர்களைப் போலவே, நடைபாதை வியாபாரிகள், சிறு, குறு வியாபாரிகளும் கந்துவட்டி கொடுமையால் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறார்கள். திருநெல்வேலியில் டவுன் மார்க்கெட், வடக்கு ரதவீதி, பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், த.மு. சாலை, ஈரடுக்கு மேம்பாலம் பகுதி போன்றவற்றில் நடைபாதை வியாபாரிகள் அதிகமுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வட்டிக்கு பணம் வாங்கியே வியாபாரத்தை நடத்துகிறார்கள்.
வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் ரூ.10 ஆயிரத்தை கொடுக்கும்போதே ரூ.1000-ஐ வட்டியாக எடுத்துக்கொண்டு தான் கொடுக்கிறார்கள். ஆனால், முழுதாக ரூ.10 ஆயிரத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். ரூ.100 வீதம் நாளொன்றுக்கு வட்டிக்காரர்களிடம் தவணை செலுத்த வேண்டும். வியாபாரமில்லை, நஷ்டம் என்றுகூறி தினமும் செலுத்த வேண்டிய தவணையை கொடுக்காவிட்டால் அடாவடிகள் ஆரம்பமாகும். வாங்கிய கடனில் குறிப்பிட்டத் தொகையை செலுத்திய நிலையில், மேலும் கடன் வாங்கி கடனாளியாகவே இருக்கும் நடைபாதை வியாபாரிகளே அதிகம்.
‘பொருட்களை கொள்முதல் செய்ய பணம் தேவைப்படும்போது வட்டிக்காரர்கள்தான், உடனே பணத்தை தருவதால் அவர்களிடம்தான் கடனுக்கு பணத்தை வாங்குகிறோம்.
எங்களுக்கு வேறுவழியில்லை. வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்றுதான் வியாபாரிகள் ஒவ்வொருவரும் நினைக்கிறோம்.
ஆனால் வியாபாரத்தில் நஷடம் ஏற்பட்டால் சொன்னதுபோல் கடனுக்கான தவணை தொகையை செலுத்த முடியவில்லை’ என்று திருநெல்வேலி நடைபாதை கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
கிடைக்கும் லாபத்தில் மது குடித்தே சிலர் பெரும் கடனாளியாகி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். மழை பெய்தாலும், அதிக வெயில் கொளுத்தினாலும் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அனுமதியின்றி கடை நடத்துகிறோம் என்ற மிரட்டலுக்கு பயந்து போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் மாமூல் தரவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இதில் கடன்காரர்களின் அடாவடிகளையும் தாங்க வேண்டும் என்று மற்றொரு கடைக்காரர் கவலையை தெரியப்படுத்தினார்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையத்துக்கு செல்லும் தமு சாலையோரத்தில் இரவு நேரங்களில் நடைபாதை இட்லி கடைகள் பிரசித்தம். இவர்களில் பலரும் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கியிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் திருக்குறுங்குடி அருகே மகிலடி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தொழிலாளியை, வட்டிக்கு பணம் கொடுத்தவரின் வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு நாய் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியில் இரவு முழுக்க அந்த தொழிலாளியை கட்டி வைத்துவிட்டனர். அவமானம் தாங்காமல் அடுத்த நாளே குடும்பத்துடன் ஊரை காலிசெய்துவிட்டு அந்த நபர் சென்றுவிட்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் கருகி பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, கந்துவட்டி குறித்து புகார் தெரிவிக்க தொடங்கப்பட்ட ஹெல்ப்லைனில், கடந்த 3 நாட்களில் மட்டும் 47 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் சாதாரண தொழிலாளர்கள்.
நிரந்தர வருமானம் இல்லாத இந்த சிறு, குறு வியாபாரிகள் கந்துவட்டி கொடுமையால் நசுக்கப்படுவதில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு வங்கி களும், கூட்டுறவு சங்கங்களும் மாதாந்திர தவணை கடனை கொடுக்க முன்வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பி.பெரும்படையார் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT