Published : 28 May 2023 06:52 PM
Last Updated : 28 May 2023 06:52 PM
புதுச்சேரி: மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடையே பிரச்னை எழ வாய்ப்பில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவரை அழைக்காமல் பிரதமரே திறப்பது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதன் காரணமாகவே அனைத்து எதிர்கட்சிகளும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. செங்கோல் விவகாரத்திலும் வரலாற்றை மாற்றும் வகையில் பிரதமர், உள்துறை அமைச்சர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜகவை விட அதிக வாக்கு சதவீதம் பெற்று வெற்றிபெற்றுள்ளது. கர்நாடக வெற்றி மூலம் பாஜக வெல்ல முடியாத கட்சியல்ல என்பது வெளிப்பட்டுள்ளது. நாடெங்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி நிலை மாநிலந்தோறும் மாறுபடும் என்றாலும், மத்தியிலிருந்து பாஜக ஆட்சியை அகற்றுவதற்கான நிலையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தியுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்தை முன்னிறுத்தப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
ஆகவே, பிரதமர் வேட்பாளர் குறித்த பிரச்னை எதிர்க்கட்சிகளிடையே ஏற்படும் வாய்ப்பில்லை. தமிழகம், புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை சில குறைகளைச் சுட்டிக்காட்டி தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்திருப்பது சரியல்ல. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு மேற்கொண்டு குறைபாடுகளை சுட்டிக்காட்டி அனுமதியை ரத்து செய்ய முன்வரவில்லையே ஏன்? அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு எனும் பெயரில் அனுமதியை ரத்து செய்திருப்பது, தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது.
ஆனாலும், குறைகளை சீர்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை மாநில அரசுகள் பெறவேண்டியது அவசியம். பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுச்சேரியில் 6 சதவீதம், காரைக்காலில் 8 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இது மிகப்பெரிய பிரச்சனை. இதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததுதான். அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர் நியமனம் செய்யாமலும், நிர்வாகத்துக்கு உதவி செய்யாமலும் கல்வியை தனியார் மயமாக்கும் கொள்கையுடன் புதுச்சேரி அரசு செயல்படுவதாலேயே தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இனியாவது அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9 வகுப்புக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் என திடீரென அறிமுகப்படுத்தி உள்ளனர். இது குறித்து யாரிடமும் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. சிபிஎஸ்இ வரும்போது பாடமொழியில் தமிழ் என்பது ஒரு ஆப்ஷனாகத்தான் இருக்கும். அது ஏற்றுக்கொள்ள முடியாதது. புதுச்சேரி மாநில அரசு சட்டப்பேரவையில் அறிவித்த அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. ஆகவே, அதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்துவது குறித்து செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் புதுச்சேரியில் கட்சியின் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.'' இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT