Published : 28 May 2023 01:52 PM
Last Updated : 28 May 2023 01:52 PM

கரூர் | வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் 8 பேர் கைது

கடந்த 26 அன்று அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையிட வந்தபோது திமுகவினர் வாக்குவாதம் | கோப்புப் படம்.

கரூர்: கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காரை சேதப்படுத்திய திமுகவினர் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்குச் சொந்தமான கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் (கடந்த 26ம் தேதி) சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த பையை திறந்து காட்ட வேண்டும் என்றும், அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியை உடைத்து, சைடு வியூ மிரரை சேதப்படுத்தினர். இதையடுத்து கரூர் நகர காவல் நிலையம் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், காவல்நிலையத்தில் புகார் அளித்ததோடு சேதமடைந்த காரை அங்கே விட்டுவிட்டுச் சென்றனர். அங்கு வந்த ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வருமான வரித்துறை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர்.

பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்குச் சென்று அவசர சிகிச்சை பிரிவில் அதிகாரிகள் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் 3 வழக்குகள், தாந்தோணிமலையில் 1 என 4 வழக்குகள் அசோக் குமாரின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது பதியப்பட்டது.

இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அருண் (27), காரை சேதப்படுத்திய திமுக கரூர் மாநகராட்சி வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி மேயரின் உறவினருமான பூபேஷ் (35), ஷாஜகான் (30), சிவபிரகாசம், சின்னசாமி, ஆறுமுகம், தமிழ்ச்செல்வன், ரஜினி சிவா என 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x