Published : 28 May 2023 11:43 AM
Last Updated : 28 May 2023 11:43 AM
சென்னை: ஜப்பானின் ஒசாகாவிலிருந்து, டோக்கியோ நகருக்கு புல்லட் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்தார்.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பானின் ஒசாகா நகருக்குச் சென்றார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (JETRO) இணைந்து ஒசாகாவில் நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதில் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ‘ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்’ தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு, அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒசாகா மாகாண துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி, ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையின் சிறப்பு குறித்து விளக்கி, அதைப் பார்வையிடுமாறு முதல்வருக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 16-ம்நூற்றாண்டில் கட்டப்பட்ட, உலகப் புகழ்பெற்ற ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்.
இந்நிலையில் இன்று ஒசாகாவிலிருந்து டோக்கியோ நகருக்கு புல்லட் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் இரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.
உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்!" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.
உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை -… pic.twitter.com/bwxb7vGL8z— M.K.Stalin (@mkstalin) May 28, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT