Published : 28 May 2023 06:23 AM
Last Updated : 28 May 2023 06:23 AM
சென்னை: சென்னை ஸ்டான்லி மற்றும் திருச்சி, தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த 3 கல்லூரிகளில் நடப்பாண்டு 500 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்து, அவற்றின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பார்கள். ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம் கேட்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டால், அங்கீகாரம் வழங்கப்படும். அப்படி குறைகள் சரிசெய்யப்படவில்லை என்றால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
அதன்படி, கடந்த மாதம் தமிழகத்தில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்தபோது, பேராசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் சிசிடிவி கேமராக்கள் முறையாக இல்லாததும், உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த குறைபாடுகளுக்காக ஏன் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பி, தேசிய மருத்துவஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், முதல்கட்டமாக மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த ஆணையம், குறைகளை சரிசெய்ய காலஅவகாசம் வழங்கியது. இதையடுத்து, குறைகளை சரிசெய்து, அங்கீகார ரத்து நடவடிக்கையை தடுப்பதற்கான முயற்சியில் மூன்று மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு இருக்க வேண்டும் என்றும், கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும் ஏற்கெனவே தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதை முறையாகப் பின்பற்றாததால் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 250, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் 150, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 என மொத்தம் 500 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த விவகாரத்தால், நடப்பாண்டில் இந்த 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 500எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்: இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி,ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மிகவும் பழமைவாய்ந்த மருத்துவமனைகளாகும்.
தேசிய மருத்துவ ஆணையம், சிசிடிவி கேமராக்கள் இல்லை என்று சிறிய குறையை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு உடனடியாகத் தீர்வு காணப்படும். அதேபோல, பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களையும் விரைவில் சரிசெய்துவிடுவோம்.
ஆனால், இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்வதாக நோட்டீஸ் அனுப்பியது வருத்தத்துக்குரியது. இந்த சிறிய குறைகளுக்காக, அங்கீகாரம் ரத்து போன்ற பெரிய வார்த்தைகளைக் கூறுவது, மாநிலத்தின் மீது அவர்கள் காட்டும் பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதாலும், அரசியல்ஆதாயத்துக்காகவும் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை குறைசொல்வது போன்ற செயல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது.
மத்திய, மாநில அரசுகளின் உறவுகளுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசுவது அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, சற்று பொறுமையாக இருப்பது நல்லது.
இவ்வாறு சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT