Published : 28 May 2023 04:10 AM
Last Updated : 28 May 2023 04:10 AM
தருமபுரி: நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட தருமபுரி-ஓசூர் சாலையில் பாலக்கோடு அருகே புதிய சுங்கச் சாவடி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் பாலக்கோடு, ராயக்கோட்டை, ஓசூர் வரை செல்லும் சாலை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஏற்கெனவே தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இருப்பினும், இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, தருமபுரியில் இருந்து ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்களின் பயண நேரம், மற்றும் தூரத்தை குறைப்பது ஆகிய நோக்கங்களுக்காக தருமபுரி-பாலக்கோடு - ராயக்கோட்டை-ஓசூர் இடையிலான சாலையை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
அதைத் தொடர்ந்து, சுமார் 100 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை விரிவாக்கம் செய்ய ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆங்காங்கே மீதமுள்ள பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த சாலையில் பாலக்கோடு அருகே புதியதாக சுங்கச் சாவடி அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
பெரிய இரும்புச் சட்டங்களை ராட்சத கிரேன் உதவியுடன் பொருத்தி சுங்கச் சாவடிக்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணியில் கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில வாரங்களில் இப்பணிகள் முழுமையாக முடிவடையும் என இப்பணிகளை கண்காணிக்கும் அலுவலர்கள் சிலர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT