Published : 28 May 2023 03:43 AM
Last Updated : 28 May 2023 03:43 AM
திருவண்ணாமலை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் வைக்கப்பட உள்ளதற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம் எழுதியிருக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று இரவு (மே 27-ம் தேதி) சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாடாளுமன்ற கட்டிடம் நாளை (இன்று) திறக்கப்பட உள்ளது. 800 பேர் அமரலாம். நாடாளுமன்ற கட்டிடத்துக்கு, நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம். நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் பெருமைபட்டாலும், தமிழர்கள் அனைவரும் பெருமைபட கூடிய நிகழ்வு உள்ளது. திருவள்ளுவர் எடுத்து கூறிய நல்லாட்சியின் அடையாளமாக, தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட உள்ளது. எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. ஆனால், செங்கோல் குறித்து அரசியலாக்கப்பட்டுள்ளது. செங்கோல் இருந்ததா, ஆட்சி மாற்றத்துக்குதான் கொடுத்தார்களா என பேச்சு எழுந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து செங்கோலை ஆதீனங்கள் கொண்டு சென்று, ஆட்சி மாற்றத்துக்கு கொடுத்துள்ளனர். இந்த செங்கோலை, ஒரு இடத்தில் போட்டுவிட்டனர். இதனை எடுத்து, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும் வரை, செங்கோலும் இருக்கும், தமிழரின் பெருமையும் இருக்கும். இதற்கு தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைபட வேண்டும்.
இதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி கடிதத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்க வேண்டும். எந்த மாநிலதுக்கும் கிடைக்காத அங்கீகாரம், தமிழகத்தின் செங்கோலுக்கு கிடைத்துள்ளது. கொள்கை மாறுபாடு இருந்தாலும், கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழுக்கு என்ற பெருமை வரும்போது, நீங்கள் அங்கீகரித்தீர்கள் என்றால், உண்மையிலேயே நீங்கள் அனைவரும் தமிழ் பற்றாளர்கள், இல்லையென்றால் உங்களது தமிழ் பற்றும் அரசியல் சார்ந்ததுதான்.
நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதமர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்தால்தான் நன்றாக இருக்கும் என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். பிரதமர் திறக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு, குடியரசு தலைவருக்கு வெறும் அழைப்பு மட்டும் கொடுக்கமாட்டார்கள். குடியரசு தலைவரின் வாழ்த்துடன் கட்டிடம் திறக்கப்படுகிறது. குடியரசு தலைவர் மீது அக்கறை கொண்டவர்கள், குடியரசு தலைவர் தேர்தலில் அவர் போட்டியிட்டபோது வாக்களிக்காதவர்கள்.
பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம், அவர்களது மனதில் வரவில்லை. ஆனால், அவர்தான் திறந்திருக்க வேண்டும் என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும்போது, அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என தெரியவில்லையா?. கருத்து வேறுபாடு இருந்தாலும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என அவருக்கு வாக்களித்தீர்களா?. உங்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு தார்மீக உரிமை கிடையாது” என்றார்.
முன்னதாக, திருவண்ணாமலைக்கு வந்த அவரை, ஆட்சியர் பா.முருகேஷ் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT