Published : 27 May 2023 09:23 PM
Last Updated : 27 May 2023 09:23 PM
சென்னை: "3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் துரிதமாக மேற்கொண்டு, வரும் ஆண்டுகளின் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகளைச் சரிவரச் செய்யாமல் தட்டிக் கழித்து விட்டு, பிறர் மேல் பழி போடும் வழக்கமான பல்லவியைப் பாட வேண்டாம்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒருபுறம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளைத் தந்து, தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது, மறுபுறம், திறனற்ற திமுக அரசு, தனது மெத்தனப் போக்கினால், 500 மருத்துவக் கல்வி இடங்களை இழக்கும் அபாயத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவேடு போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மருத்துவ சேர்க்கை நிறுத்தப்படும் என்று மருத்துவக் கல்விக் குழு (UGMEB) கல்லூரி முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
உடனடியாகத் தமிழக அரசு தலையிட்டு, இந்த மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் துரிதமாக மேற்கொண்டு, வரும் ஆண்டுகளின் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகளைச் சரிவரச் செய்யாமல் தட்டிக் கழித்து விட்டு, பிறர் மேல் பழி போடும் வழக்கமான பல்லவியைப் பாட வேண்டாம் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 3 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை இடங்களுக்கான அங்கீகாரத்தை திரும்பப் பெற இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. | விரிவாக வாசிக்க > தமிழகத்தில் அங்கீகாரத்தை இழக்கும் 500 எம்பிபிஎஸ் இடங்கள் கொண்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகள்: நடந்தது என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT