Published : 27 May 2023 04:32 PM
Last Updated : 27 May 2023 04:32 PM

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா | “வரலாற்றுப் பிழையாக இடம்பெறும் ஆபத்து” - கமல்ஹாசன்

சென்னை: “பிரதமரிடம் நான் முன்வைப்பதெல்லாம் ஒரே ஒரு எளிய கேள்விதான். இந்தத் தேசத்தின் மக்களுக்கு ஒன்றை மட்டும் தெரியப்படுத்துங்கள், ஏன் இந்தியக் குடியரசுத் தலைவர் நமது புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது?” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை நடைபெற இருக்கும் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா ஒரு தேசியக் கொண்டாட்டம். எனக்கும் மிகுந்த பெருமிதம் கொடுக்கும் நிகழ்வு இது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில் இந்திய அரசுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேச நலன் கருதி, நாடாளுமன்றத் திறப்பு விழாவை நானும் வரவேற்கிறேன். அதேசமயத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காததற்கும், திறப்பு விழா நிகழ்வின் திட்டமிடலில் எதிர்க்கட்சிகளை இணைத்துக் கொள்ளாததற்கும் எனது எதிர்ப்பினைப் பதிவு செய்கிறேன்.

தேசத்திற்கே பெருமிதம் தரவேண்டிய ஒரு தருணம், அரசியல் ரீதியான பிரிவினைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது. பிரதமரிடம் நான் முன்வைப்பதெல்லாம் ஒரே ஒரு எளிய கேள்விதான். "தயவுசெய்து இந்தத் தேசத்தின் மக்களுக்கு ஒன்றை மட்டும் தெரியப்படுத்துங்கள், ஏன் இந்தியக் குடியரசுத் தலைவர் நமது புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது?" இந்தத் தேசத்தின் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் இந்த முக்கியமான நிகழ்வில் ஏன் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்கான காரணமாக எனக்கு எதுவுமே புலப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சட்ட வரைவுகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தால்தான் இந்த நாட்டில் அது சட்டங்களாகவே ஆகமுடியும். நாடாளுமன்றத்தின் அமர்வுகளைத் தொடங்கவும், தள்ளிவைக்கவும் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உண்டு. நாடாளுமன்றம் செயல்படுவதில் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. இந்த விவகாரத்தில் சமரசம் நிலவும் விதமாக இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இந்நிகழ்வுக்கு அழைக்க வேண்டும் என்பதை என் தரப்பு ஆலோசனையாக பிரதமருக்குத் தெரிவிக்கிறேன்.

புதிய நாடாளுமன்றம் சாதாரணமானதொரு கட்டடம் மட்டும் அல்ல. இனி வருங்காலம் நெடுக அதுவே இந்தியக் குடியரசின் அரசியல் உறைவிடமாகத் திகழும். மாபெரும் வரலாற்றுப் பிழையாக இடம் பெறக்கூடிய ஆபத்துமிக்க இந்தப் பிழையை உடனடியாக சரிசெய்யும்படி பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தவறு சரிசெய்யப்பட்டால், அரசியல் தலைமைகளின் வரலாற்றில் இதொரு மைல்கல்லாகத் திகழும்.

நமது குடியரசின் உறைவிடத்தில் அதன் அத்தனை உறுப்பினர்களும் சென்று அமரவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதே சரியான மக்களாட்சி என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே, இந்த நிகழ்வைப் புறக்கணிக்க முடிவுசெய்திருக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளையும் கூட தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன். இதனை ஒட்டி உங்களுக்கு இருக்கும் மாற்றுக் கருத்துக்களை பொதுவெளியில் பதிவு செய்யலாம், புதிய நாடாளுமன்றத்தின் சபையிலும் பதிவு செய்யலாம்.

நம்மைப் பிரிப்பவற்றைக் காட்டிலும் இணைப்பவை அதிகம் என்பதை அனைத்துக் கட்சியினரும் நினைவில்கொள்ள வேண்டுகிறேன். இந்த நிகழ்வுக்காக நமது தேசமே ஆர்வமாகக் காத்திருக்கிறது, மொத்த உலகமும் அமைதியாக நம்மை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவை நமது தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குவோம், நமது அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒரு நாள் தள்ளிவைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x