Last Updated : 27 May, 2023 01:47 PM

 

Published : 27 May 2023 01:47 PM
Last Updated : 27 May 2023 01:47 PM

சிதம்பரம் | சமூக வலைதளங்களில் வைரலாகும் தீட்சிதர்களின் குழந்தை திருமண புகைப்படங்கள்: சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் கண்டனம்

ஜெமினி எம்.என் ராதா

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தை திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியில் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் கடந்த ஆண்டு தீட்சிதர்கள் சிலரின் இல்லங்களில் குழந்தைத் திருமணம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரின் புகாரின் அடிப்படையில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர், "தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு, குழந்தை திருமணமே நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் தீட்சிதர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறிய ஆளுநர் ரவி, தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரு விரல் பரிசோதனை நடைபெற்றதாகவும் கூறினார்.

இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் லட்சுமி வீரராகவன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தீட்சிதர்களிடம் விசாரணை செய்தனர். தொடர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் வழக்கு குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவர் ஆனந்த் இது குறித்து விசாரணை மேற்கொள்ள சிதம்பரத்திற்கு வருகை தந்தார். அப்போது தீட்சிதர்கள் மற்றும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்பட்ட தீட்சிதர் குழந்தைகள், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை. அவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறவில்லை. ஆனால், போலீஸார் கட்டாயப்படுத்தியதால் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது" எனக் கூறினார்.

ஆனால், நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஆண்டாண்டு காலமாக குழந்தை திருமணம் செய்து வருகிறார்கள் என சிதம்பரம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா கூறுகையில், “நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தை திருமணம் செய்து வருகிறார்கள். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், குழந்தைகள் போலீஸார் கட்டாயப்படுத்தியதால் திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டு உள்ளார்கள் எனக் கூறியுள்ளது முற்றிலும் தவறானது. இதுபோல தவறான கருத்தை கூறி தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் தமிழக ஆளுநர் மீது குடியரசு தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த நிலையில், தீட்சிதர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து குழந்தைத் திருமணம் செய்து வருகிறார்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக சில புகைப்படங்கள் நேற்று முன்தினம் (மே.26) முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x