Last Updated : 29 Oct, 2017 09:34 AM

 

Published : 29 Oct 2017 09:34 AM
Last Updated : 29 Oct 2017 09:34 AM

தமிழ்நாட்டில் 50 தொழிற்சாலைகளில் தரமற்ற எம்-சாண்ட் தயாரிப்பு: அதிரடி சோதனை நடத்த அதிகாரிகள் திட்டம்

தமிழ்நாட்டில் 120 எம்-சாண்ட் (நொறுக்கப்பட்ட கல் மணல்) தொழிற்சாலைகளில் 50-க்கும் மேற்பட்ட ஆலைகள் தரமற்ற எம்-சாண்ட் தயாரிப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆலைகளில் திடீர் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆறுகளில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதைத் தடுக்க ஆற்று மணலுக்கு மாற்று மணலான எம்-சாண்ட் (தயாரிக்கப்பட்ட ஜல்லி மணல்) பயன்படுத்த வேண்டும் என்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் பொதுமக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எம்-சாண்ட் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கையேடு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,000 திரையரங்குகளில் எம்-சாண்ட் பற்றிய விளம்பரப் படமும் திரையிடப்படுகிறது.

அரசு அறிவுறுத்தல்

எம்-சாண்ட் பயன்படுத்துவோர் ஒவ்வொரு முறை வாங்கும்போதும் அதனை ஆய்வு செய்துகொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை தரமணியில் உள்ள தேசிய தரப் பரிசோதனை ஆய்வகம், பொதுப்பணித் துறையின் மண் தன்மை ஆராய்ச்சி மையம், தமிழக அரசு கட்டிட ஆராய்ச்சி நிலையம், கிண்டி யில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன ஆய்வகம், தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வகங்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி ஆய்வகங்கள் ஆகிய இடங்களில் எம்-சாண்ட் பரிசோதனை செய்யப்படுகிறது. சாதாரண ஆய்வுக்கு ரூ.2 ஆயிரமும், விரிவான ஆய்வுக்கு ரூ.10 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அரசு சான்று பெற வேண்டும்

எம்-சாண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கல்குவாரி துகள்களை அதிகமாகக் கலந்து எம்-சாண்ட் தயாரிப்பதாக அரசுக்கு தகவல் வந்ததால், இந்தத் தொழிற்சாலைகள் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி தரமான எம்-சாண்ட் தயாரிக்க வேண்டும்.

அத்துடன் தங்களது தயாரிப்பு தரமானதுதான் என்பதற்கான அரசு சான்று பெற்ற பிறகே விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்பிறகும் எம்-சாண்ட் தொழிற்சாலைகள் தரமற்ற எம்-சாண்ட் தயாரித்து வருவதால் இந்த ஆலைகளைக் கண்காணித்து தரமான எம்-சாண்ட் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித் துறை செயற் பொறியாளர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்-சாண்ட்டுக்கு அரசு சான்று பெறுவதற்காக கடந்த இரு மாதங்களில் 5 தொழிற்சாலைகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளன. இதனால் தரமற்ற எம்-சாண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் திடீர் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களது அறிவிப்பைத் தொடர்ந்து அண்மையில் ஒருவர் பொதுப்பணித் துறை சேப்பாக்கம் வளாகத்துக்கு எம்-சாண்ட் மாதிரியை எடுத்து வந்து ஆய்வு செய்து தரும்படி கோரினார். அதனை ஆய்வு செய்தபோது அதில் 70 சதவீதம் கல்குவாரி துகள்கள் கலந்திருப்பது தெரியவந்தது. இதைக் கொண்டு வீடு கட்டினால் மூன்று ஆண்டுகள் மட்டுமே கட்டிடம் நிலைத்து நிற்கும். அதனால் அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவைத்தோம். அதைத்தொடர்ந்து அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு தரமற்ற எம்-சாண்ட் தயாரித்தால் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தோம். அந்த ஆலையை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

ஐ.எஸ்.ஐ. முத்திரை

தமிழ்நாட்டில் உள்ள 120 தொழிற்சாலைகளில் 50-க்கும் மேற்பட்டவை தரமற்ற எம்-சாண்ட் தயாரிப்பது தெரிய வந்துள்ளது. அதனால் அந்த ஆலைகளில் திடீர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் எம்-சாண்ட்டை ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x