Published : 26 May 2023 07:53 PM
Last Updated : 26 May 2023 07:53 PM
சென்னை: 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வெள்ளிக்கிழமை (மே 26) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டிற்கான (2023ஆம் ஆண்டு) மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.79 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடிதடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000- வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 89.50 கோடி அரசு நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை இன்று (26.05.2023) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT