Published : 26 May 2023 05:50 PM
Last Updated : 26 May 2023 05:50 PM
சென்னை: கோயில் அர்ச்சகரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பதியப்பட்ட வழக்கில் கோயில் உதவி ஆணையருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம், சுகவனேஸ்வரர் கோயில் உதவி ஆணையராக, 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜயகுமார் நியமிக்கப்பட்டார். பொறுப்புக்கு வந்த பின்னர், சுகவனேஸ்வரர் கோயில் கட்டுப்பாட்டில் வரும் சேலம் ராஜகணபதி கோயில் அர்ச்சகர்களை அழைத்து, தினசரி காணிக்கை வசூலின் அடிப்படையில் தனக்கு மாதந்தோறும் மாமூல் வழங்க வேண்டும் என கூறினார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயிலில் திருஞானசம்பந்தம் என்பவர் பூஜை செய்ய அனுமதித்ததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒழுங்கு நடவடிக்கையைத் தவிர்க்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், கோயில் அர்ச்சகரான சரவண குருக்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்த வழக்கை விசாரித்த சேலம் ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விஜயகுமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து விஜயகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கின் புகார்தாரரான சரவண குருக்கள், வழக்கு விசாரணையில் இருந்தபோதே இறந்து விட்டதால், லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து" தீர்ப்பளித்தார்.
மேலும், விஜயகுமார் ஏற்கெனவே கும்பகோணத்தில் உள்ள உப்பிலியப்பன் கோயிலில் பணியாற்றியபோது, வருவாய் இழப்பை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதேபோல ராஜகணபதி கோயிலில் அபிஷேகம், பூஜைகளுக்கு டிக்கெட் முறையை அமல்படுத்த முயற்சித்ததால், பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் இந்த புகாரை அளித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரியின் நடத்தை குறித்து புலன்விசாரணை அதிகாரி விசாரித்திருக்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT