Published : 26 May 2023 05:40 PM
Last Updated : 26 May 2023 05:40 PM
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறை ரூ.7.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து ஜூன் மாதம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள ஜிஎஸ்டி சாலைக்கு அருகில் உள்ள சாலை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அவரச கால வழி அருகில் இருக்கும் சாலை 5.5 மீ அகலம் மட்டுமே உள்ளது. இந்த சாலை ஆம்னி பேருந்துகள் வந்து செல்வதற்காக போதுமான அளவு இல்லை. எனவே, அய்யன்சேரி முதல் மீனாட்சிபுரம் வரை உள்ள 1.2 கி.மீ நீளச் சாலையை 2 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று நெடுஞ்சாலைத்துறை சாலை அகலப்படுத்தும் பணிக்கு ரூ.7.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர்கள் கூறினர்.
முன்னதாக, "கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பொறுத்தவரையில் முன்னதாக இந்த முனையத்துக்கு வரும் பேருந்துகளின் போக்குவரத்தை கருத்தில் கொள்ளாமல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் பேருந்து நிலையத்துக்கு உண்டான அணுகு சாலைகள், அதேபோல் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வருகின்ற போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு உண்டான திட்டமிடல் போன்றவற்றை கணக்கிட்டு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றோம்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT