Published : 26 May 2023 04:22 PM
Last Updated : 26 May 2023 04:22 PM
சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறும்போது, "கருணாநிதியின் காலத்திலிருந்து மத்திய அரசை பொறுத்தளவில் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடுதான் இயங்கி வருகின்றோம். அண்மையில் ஆளுநருடன் ஏற்பட்ட சர்ச்சையிலும் கூட முதல்வர் தெளிவாக விளக்கிக் கூறினார். ஆளுநர் நண்பர் என்று சொன்னாலும் நட்புக்காக கொள்கையிலே சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று கூறினார்.
அந்தவகையிலே டெல்லியிலே நடைபெறவிருக்கின்ற புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் திராவிட முன்னேற்றக் கழகம், குடியரசுத் தலைவரை வைத்துத்தான் அந்த கட்டிடத்தை திறக்க வேண்டுமென்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்றோம். நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கின்ற குடியரசுத் தலைவர் அந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தால்தான் அது ஏற்புடையதாக இருக்கும் என்பதுதான் முதல்வரின் நிலைபாடு.
சென்னையிலே நேற்றைக்கு நடந்த மத்திய நிதியமைச்சர் நிகழ்ச்சியில் செங்கோல் தருவதற்குண்டான விளக்கத்தை எடுத்து கூறுகின்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் என்ற முறையில் என்னை முதல்வர் அந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கச் செய்தார்.
“தமிழ், தமிழினுடைய கலாச்சாரம், தமிழினுடைய பெருமை, தமிழர்களுடைய பண்பாடு, மரபு இவைகளை பேணிக் காப்பதற்கு முதல்வர் ஓங்கி குரல் கொடுப்பதில் என்றைக்கும் சளைத்தவர்களாக இல்லை. அந்த வகையில் தமிழகத்திற்குண்டான பெருமை என்பதால் தமிழகத்தினுடைய பண்பாடு கலாச்சாரத்திற்கு ஒரு புகழ் என்பதால் தமிழகத்திலே உருவாக்கப்பட்ட இந்த செங்கோல் டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்திலே அமைய இருப்பதால் இதில் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் பங்கேற்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்தவிதமான சங்கடமும், வருத்தமும் இல்லை என்பதால் நேற்றைக்கு அதிலே கலந்துகொண்டோம்.
எங்களுடைய நிலைபாடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைபாடு, முதல்வரின் நிலைபாடு, டெல்லியிலே அமைய இருக்கின்ற நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்கவேண்டும் என்ற நிலைபாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது” என்று அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT