Published : 26 May 2023 04:03 PM
Last Updated : 26 May 2023 04:03 PM

கரூரில் ஐ.டி ரெய்டு | சட்டம் - ஒழுங்கு சூழலை பிரதிபலிக்கிறது அதிகாரிகள் மீதான தாக்குதல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: “கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறைத் தாக்குதல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித் துறையினரை தங்கள் பணியைச் செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு அவர்களது வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித் துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. வருமான வரித் துறையினருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தமிழக காவல் துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினர் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்தபோது, உடனடியாக காவல் துறையினர் விரைந்து செல்லாதது ஏன்?

சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

வருமான வரித் துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வருமான வரித் துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x