Published : 26 May 2023 03:40 PM
Last Updated : 26 May 2023 03:40 PM
திருவாவடுதுறை: நாடு சுதந்திரம் அடைந்தபோது ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் நோக்கில் செங்கோல் கொடுக்கப்பட்டதை பொய் அல்லது போலி என்று கூறுவது வருத்தத்திற்குரியது என்று திருவாவடுதுறை ஆதீனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "குறிப்பிட்டதொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொன்னதாகச் சில அறிக்கைகளைக் கண்டோம். 1947-ல் ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப் பெற்றது குறித்த வரலாற்றைப் பொய் என்று இந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறியதாகத் தெரியவருகிறது.
ஆட்சி மாற்றத்தின்போது அதனை அடையாளப்படுத்துகிற சடங்கினைச் செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்முடைய ஆதீனகர்த்தர், தங்க செங்கோல் செய்வித்து முறையான சடங்குகளில் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் அதைக் கொடுத்து வாங்கி, தொடர்ந்து செங்கோலைப் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கச் செய்தார்கள். பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தமபிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் சின்னம் என்பதையும் தெளிவாகத் தெரிவித்தார்.
அரசியலுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக இந்தச் சடங்குகளும் நிகழ்வுகளும் பொய் அல்லது போலி என்று கூறுதல், எமது நம்பிக்கைத் தன்மையின் மீது ஐயம் எழுப்புதல், ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயலுதல் ஆகியவை மிகுந்த வருத்தத்திற்குரியவை, தவிர்க்கப்பட வேண்டியவை" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருவாவடுதுறை ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்தபோது திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நாடு சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக பிரதமர் நேருவுக்கு செங்கோல் கொடுக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்தபோது நேரு, ராஜாஜி போன்ற பெரும் தலைவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார்கள். 18 சைவ ஆதீனங்களில் தலைமை ஆதீனமாக இருப்பது திருவாவடுதுறை ஆதீனம். நமது ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது; அதை எவ்வாறு அடையாளப்படுத்துவது என கேட்டார்கள். அப்போது ஆதீனகர்த்தராக 20வது குருமகா சந்நிதானம் அம்பலவான தேசிகர் இருந்தார். அவர்தான் செங்கோலை வழங்க ஏற்பாடு செய்தார். சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு நகைக்கடையில்தான் 5 அடி உயர அந்த செங்கோல் செய்யப்பட்டது.
ஆதீன கர்த்தரின் உத்தரவுக்கு இணங்க ஆதீன தம்பிரான் சடைசாமி என்கிற குமாரசாமி தம்பிரான், மாணிக்கம் ஓதுவார், டி.என். ராஜரத்தினம் ஆகியோர் விமானம் மூலம் டெல்லி சென்றார்கள். அங்கு மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் தம்பிரான் சுவாமிகள் செங்கோலை கொடுத்தார். பின்னர், மவுண்ட் பேட்டன் பிரபு செங்கோலை தம்பிரான் சுவாமிகளிடம் கொடுத்தார். அப்போது, ஆட்சி அதிகாரத்தை நேருவிடம் கொடுக்க வேண்டும் என்று தம்பிரான் சுவாமிகள் கூறினார். அதன்படி, ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட செங்கோலானது நேருவிடம் வழங்கப்பட்டது.
தற்போது புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில், 75 ஆண்களாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்த அந்த செங்கோலை, பிரதமர் மோடி அவர்கள் பெற்று அதனை மக்களவை சபாநாயகர் இருக்கையில் பொருத்த இருக்கிறார். இது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு மகிழ்ச்சியான செய்தி.
ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் விதமாக செங்கோல் வழங்கப்படவில்லை என சிலர் கூறுவதாக செய்தி வெளியாகி உள்ளது. அது உண்மையல்ல. செங்கோல் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், புகைப்பட ஆதாரங்கள் எல்லாம் உள்ளன. இது தொடர்பாக ஆதீனம் சார்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைப் பார்த்தலே தெளிவு கிடைக்கும்( புத்தகத்தைக் காட்டுகிறார்). செங்கோல் கொடுக்கும்போது தேவாரம் பாடப்பட்டது. 11 பாடல்களைப் பாடி அதன் கடைசி பாடலாக, அரசால்வர் ஆணை நமதே என்ற பாடலை ஓதுவார்கள் பாடி, புனித நீர் தெளித்து செங்கோல் நேருவிடம் கொடுக்கப்பட்டது.
செங்கோல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல என சிலர் கூறி இருப்பது வருத்தமளிக்கிறது. பொய்யான தகவலை சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து செங்கோல் சென்றது. இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை கிடைத்திருக்கிறது. நீதி நெறி தவறாமல் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே செங்கோல் கொடுக்கப்படுகிறது. அவ்வையார் ஒரு பாடலில், வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோல் உயரும்; கோல் உயர கோன் உயர்வான் என பாடியுள்ளார். கோன் உயர்வான் என்றால் அரசின் உயர்வான் என்பதாகும். செங்கோல் குறித்து வள்ளுவரும் திருக்குறளில் கூறி இருக்கிறார். அரசன் நடுநிலை தவறாமல் எல்லோருக்குமாக இருந்து அரசாட்சி செய்ய வேண்டும் என அதில் அவர் கூறி இருக்கிறார்.
தற்போது புதிதாக செங்கோல் வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே நேருவுக்குக் கொடுக்கப்பட்ட செங்கோல், மூடி மறைக்கப்பட்டிருந்தது. அதனை உலகிற்குத் தெரியப்படுத்தும் நோக்கிலேயே செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போது மீண்டும் வழங்க உள்ள செங்கோலுக்கு சிறப்பு பூஜை ஏதும் செய்யப்படுமா என்பது குறித்து தெரியவில்லை. அங்கு(டெல்லிக்கு) சென்றால்தான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT