Published : 26 May 2023 02:50 PM
Last Updated : 26 May 2023 02:50 PM
விருதுநகர்: தேங்காய், பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் அவற்றை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விருதுநகர் குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராதா கிருஷ்ணன், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண்துறை சார்ந்த பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ராமச் சந்திரராஜா பேசுகையில், “மா பயிருக்கு காப்பீட்டுத் திட்டம் கொண்டுவர வேண்டும். மா விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.10க்கு தனியார் வியாபாரிகள் வாங்குகிறார்கள். இதனால், விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. அதனால், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் மா ஏலம் நடத்த வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு, பருத்திக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. கிலோ ரூ.150-க்கு விற்பனையான பருத்தி தற்போது ரூ.50-க்கு விற்பைனையாகிறது. உழவர் சந்தையிலோ அல்லது கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலோ பருத்தியை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயமுருகன், மாவட்டச் செயலர் முருகன் ஆகியோர் பேசுகையில், “தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. ஆயிரம் காய்களுக்கு 150 தேங்காய்கள் லாபக் காயாக தனியார் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தென்னை விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைகின்றனர். எனவே, தேங்காய் மற்றும் பருத்தியை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்” என்றனர்.
தொடர்ந்து சாத்தூர் பகுதி விவசாயிகள் பேசுகையில், “சாத்தூர் வெள்ளரிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், சாத்தூர் வெள்ளரிக்கும், அதலாக்காய்க்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
திருச்சுழி பகுதி விவசாயிகள் பேசுகையில், “மணல் மற்றும் கல் குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. கண்மாய்களை மூடி பாதை அமைத்துள்ளனர். கிராமச் சாலைகளில் ஏராளமான லாரிகளை இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அதோடு, நீர் வழிப்பாதைகளும், ஓடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
அதோடு, “கண்மாய்களில் மீன்பாசி குத்தகை ஏலம் விடும்போது ஏலத் தொகையில் 50 சதவிகிதம் அப்பகுதி ஆயக்கட்டு பாசன விவசாய சங்கத்திற்கு பொதுப் பணித்துறை வழங்க வேண்டும். ஆனால், இதுவரை அவ்வாறு வழங்கப்படவில்லை” என கேள்வி எழுப்பினர். மேலும், அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு செய்ய வேண்டும் என்றும், தேவையுள்ள பகுதிகளில் உளர் களம் அமைக்க வேண்டும் என்றும், அர்சுணா நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT