Published : 26 May 2023 06:13 AM
Last Updated : 26 May 2023 06:13 AM

சென்னையில் யானைக்கவுனி பாலப்பணி தீவிரம்: இந்தாண்டு இறுக்குள் முடிக்க திட்டம்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள யானைக்கவுனி பாலப்பணிகள் தற்போது சுறுசுறுப்படைந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டமிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் பழமையான யானைக்கவுனி பாலம் அமைந்துள்ளது. வலதுபுறம் பேசின்பாலம் பணிமனையும், இடதுபுறம் சால்ட் கோட்ரஸ் சரக்கு பணிமனையும் இணைக்கும் விதமாக, சென்ட்ரல் பணிமனையின் வெளியே செல்லும் பகுதியில் இந்த பாலம் உள்ளது.

பழமையான இந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்ட, ரயில்வே வாரியம் 2020-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. முன்பு, இப்பாலத்தில் 50 மீட்டர் நீளமுள்ள பகுதி ரயில்வே துறையால் பராமரிக்கப்பட்டு வந்தது.

தற்போது, இந்தப் பகுதியை இடித்துவிட்டு 156 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் இருபுறமும் 364 மீட்டர் அளவுக்கு சாய்தள சாலை மாநகராட்சியால் அமைக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், வால்டாக்ஸ் சாலை நோக்கி 165.24 மீட்டர், ராஜா முத்தையா சாலையை நோக்கி 198.99 மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்க, மாநகராட்சி சார்பில், ரூ.30 கோடியே 78 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யானைக்கவுனி பாலப்பணியில் முக்கியமான கர்டர் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கிநடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

ரயில்வே தரப்பில், ரூ.43.77 கோடி செலவில் யானைக்கவுனி மேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன. தூண்கள் முழுமையாக அமைக்கப்பட்டு, அடுத்த கட்டமாக பாலத்தின் மேற்பகுதிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 ஸ்டீல் கர்டர்களில், தற்போது, 2 ஸ்டீல் கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x