Published : 26 May 2023 06:10 AM
Last Updated : 26 May 2023 06:10 AM
சென்னை: ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 வயதுக்குட்பட்ட 93 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் 6 வயதுக்குட்பட்ட 25 லட்சத்து 23,373 குழந்தைகள், 6 லட்சத்து 82,073 கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 46,063 வளரிளம் பெண்கள் என மொத்தம் 32 லட்சத்து 51,509 பேர் பயனடைந்து வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குதல், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் சுகாதார கல்வி ஆகியவை அங்கன்வாடி வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக கடந்த ஆண்டு ரூ.2,765 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் அடிப்படையில் இதுவரை 37.27 லட்சம் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை கணக்கிடப்பட்டு, அவர்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 43,299 குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 மாதங்களுக்குட்பட்ட, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 11,917 குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 16,415 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, பேரிச்சம்பழம், ஆவின் நெய், புரோட்டின் பிஸ்கட், இரும்புசத்து திரவம் மற்றும் குடற்பூச்சி நீக்க மாத்திரை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட 93,200 குழந்தைகளுக்கு, உடனடியாக உட்கொள்ளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு உணவானது அரைத்த வேர்க்கடலை, பால் பவுடர், சர்க்கரை, எண்ணெய், வைட்டமின்கள் மற்றும் மினரல் பொருட்களை கொண்டதாகும்.
எனவே இத்திட்டத்தின் பயன்களை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலமாக பொதுமக்கள் தெரிந்து கொண்டு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சமூகநலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT