Published : 26 May 2023 10:42 AM
Last Updated : 26 May 2023 10:42 AM

முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்து 2 ஆண்டுகள் நிறைவு: மதுரை கப்பலூர் ‘டோல்கேட்’ எப்போது அகற்றப்படும்?

கப்பலூர் சுங்கச்சாவடியில் உடனுக்குடன் சர்வர் வேலை செய்யாததால் காத்திருக்கும் வாகனங்கள்.

மதுரை: முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சர்ச்சைக்குரிய மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நான்கு வழிச் சாலையில் 60 கிமீ., தொலைவுக்குள் ஒரு சுங்கச்சாவடி (டோல்கேட்) இருக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய விதிமுறை உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை மீறி தமிழகத்தில் உள்ள நான்குவழிச்சாலைகளில் 11 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை கப்பலூரில் விதியை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கப்பலூருக்கு முன் 50 கி.மீ., தொலைவுக்குள் திண்டுக்கல் சாலையில் மற்றொரு சுங்கச்சாவடி உள்ளது. அதனால், 60 கிமீ அடிப்படையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்

கடந்த பல ஆண்டுகளாக திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 50 கிராம மக்கள் போராடி வருகிறார்கள். பொதுமக்கள் போராட்டத்தையொட்டி சமீப காலமாக திருமங்கலம் உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் சுங்கக் கட்டண வசூல் செய்யாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், முன்பிருந்த போராட்டத்தின் தீவிரம் தற்போது குறைந்துள்ளது. ஆனால், நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், விதிமுறையை மீறி அமைக்கப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மதுரை ஒத்தக்கடைக்கு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடம், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் முறையிட்டனர். அதற்கு ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் சுங்கச்சாவடி உறுதியாக அகற்றப்படும் என உறுதியளித்தார்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பலமுறை மதுரை வந்து சென்ற ஸ்டாலின், இதுவரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது திருமங்கலத்தைச் சுற்றியுள்ள 50 கிராம மக்கள் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைத்துள்ளது.

ஆனால், வெளியூரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் விதியை மீறி அமைத்த இந்த சுங்கச்சாவடியில் தினமும் கட்டணம் செலுத்தி பாதிக்கப்படுகின்றனர். மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,

நாடு முழுவதும் விதிகளை மீறி அமைத்த சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் எனவும் மாநில அரசுகளை அந்த சுங்கச்சாவடிகள் பட்டியலை அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார்.

மத்திய அமைச்சர் கூறி ஓராண்டுக்கு மேல் ஆகியும், கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படவில்லை. விதிகளை மீறிய பட்டியலில் கப்பலூர் சுங்கச்சாவடியைச் சேர்த்து தமிழக அரசு அனுப்பியதா? அல்லது அப்படியொரு பட்டியலையே அனுப்பவில்லையா? என்பதும் தெரியவில்லை.

வாகன ஓட்டுநர்கள் தவிப்பு: வாகன ஓட்டுநர்கள் சுங்கச் சாவடிகளில் காத்திருப்பதைத் தவிர்க்கவே ‘பாஸ்ட் டேக்’ முறை தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், கப்பலூர் சுங்கச்சாவடியில் தினமும் சர்வர் பழுதால் வாகனங்களின் முன் ஓட்டப்பட்டுள்ள ‘பாஸ்ட் டேக்’ கோர்டு மூலம் பணம் எடுக்க முடியவில்லை.

இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்கு ஊழியர்கள் முயற்சிக்கும்போது சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள், வரிசை கட்டி நிற்கின்றன. அதனால், எந்த நோக்கத்துக்காக ‘பாஸ்ட் டேக்’ முறை கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நிறைவேறவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x