Published : 21 Jul 2014 09:33 AM
Last Updated : 21 Jul 2014 09:33 AM
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தர வரிசை பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு தலைவர் டாக்டர் எம்.திருநாவுக்கரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இதில் 2014-15 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (B.V.Sc.), பி.டெக். உணவுத் தொழில்நுட்பம் (B.Tech. F.T.), மற்றும் பி.டெக். கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் (B.Tech.P.P.T.) ஆகிய பட்டப் படிப்புகளுக்கான தகுதியான மாணவர்களின் தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 12.05.2014 முதல் 30.05.2014 வரை விநியோகிக்கப்பட்டன. இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு 14,571 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 14,293 விண்ணப்பங்கள் தகுதியானவை. பி.டெக். உணவுத் தொழில்நுட்பம் படிப்புக்கு 2,521 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றுள் 2,314 விண்ணப்பங்கள் தகுதியானவை. பி.டெக். கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் படிப்புக்கு 1,606 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 1,471 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மதிப்பெண் அடிப்படையில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களின் தரப்பட்டியல் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவுக்கான தரப்பட்டியல் பிறகு வெளியிடப்படும்.
கவுன்சலிங்
இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பில் சிறப்பு பிரிவு மற்றும் பிளஸ்-2வில் தொழில் படிப்பு படித்தவர்களுக்கு கவுன்சலிங் ஜூலை 30-ம் தேதியும் மற்றவர்களுக்கு 31-ம் தேதியும் நடைபெறுகிறது.
பி.டெக். உணவுத் தொழில்நுட்பம் மற்றும் பி.டெக். கோழியின உற்பத்தி தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு அனைத்து பிரிவினருக்கும் ஆகஸ்ட் 1-ம் தேதி கவுன்சலிங் நடைபெறுகிறது.
கவுன்சலிங் அழைப்புக் கடிதம் விரைவில் தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் அனுப்பப் படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT