Published : 07 Oct 2017 06:10 PM
Last Updated : 07 Oct 2017 06:10 PM
திரையரங்கு கட்டணத்தில் ஜி.எஸ்.டி வரி மட்டுமே டிக்கெட் விலையுடன் கூடுதலாக இருக்கும். கேளிக்கை வரி டிக்கெட் விலையுடன் சேர்க்கப்படாது என்று கோவை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
திரையரங்கு கட்டண விலை உயர்வு மக்களை பாதிப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தி இந்து தமிழுக்கு அளித்த பேட்டி வருமாறு:
டிக்கெட் கட்டண உயர்வு மக்கள் தலைமீது தான் விழுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
தற்போது உயர்த்தப்பட்டுள்ள டிக்கெட் கட்டண உயர்வில் கட்டண உயர்வுடன் ஜி.எஸ்.டி மட்டுமே கூடுதலாக இருக்கும். கேளிக்கை வரி இருக்காது. அது கட்டண உயர்வுக்குள்ளேயே இருக்கும்.
ஜி.எஸ்.டி வரியை டிக்கெட் விலையுடன் கூடுதலாக போடுவது சரியா?
ஜி.எஸ்.டி வரியை வாங்கும் பொருளுக்கு மேல் கூடுதலாக போடுவது தான் நடைமுறை. இதில் சினிமா டிக்கெட்டுக்கு மட்டும் தனி விதிவிலக்கு ஏதாவது உண்டா? ஓட்டலில் சாப்பிடுகிறோம், கடையில் பொருட்கள் வாங்குகிறோம் அதில் ஜி.எஸ்.டி வரியை தனியாகத்தானே போடுகிறார்கள்.
டிக்கெட் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்கிறீர்களா?
இல்லை ஏற்றுக்கொள்ளவில்லை. கேளிக்கை வரியை நீக்க சொன்னோம் நீக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள விலை உயர்வு போதாது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. வரும் திங்கட்கிழமை கூடி இதுபற்றி முடிவெடுக்க உள்ளோம்.
மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கு ஒரு விலை மற்ற தியேட்டர்களுக்கு ஒரு விலை நிர்ணயித்துள்ளார்கள். சென்னை, கோவை போன்ற பல நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர மற்ற தியேட்டர்கள்தான் அதிகம் உள்ளன. மின் கட்டணம் முதல் எல்லா கட்டணமும் அனைவருக்கும் ஒன்றுதான். அப்படி இருக்கும் போது இதை எப்படி ஏற்க முடியும்.
தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் இது பற்றி முடிவெடுக்கிறார்களா?
அவர்களும் இது பற்றி பேச உள்ளனர். விரைவில் அனைவரும் பேசி முடுவெடுப்போம். எங்களுக்கு நியாயமான விலை உயர்வை அறிவித்தால் தான் நாங்கள் பிழைக்க முடியும்.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT