Published : 15 Oct 2017 09:32 AM
Last Updated : 15 Oct 2017 09:32 AM
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்து ஏற்பட்டால் மீட்புப் பணியில் ஈடுபட தமிழகம் முழுவதும் 5,500 தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்புத் துறை டிஜிபி கே.பி.மகேந்திரன் கூறினார். மீட்புப் பணிக்காக ‘வாட்டர் பவுசர்’ என்ற புதிய வகை தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிஜிபி ஆலோசனை
தீபாவளி பண்டிகை வரும் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியின்போது, பட்டாசு விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வது, காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை தொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு துறை இயக்குநரும், டிஜிபியுமான கே.பி.மகேந்திரன் ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குநர் சாகுல் அமீது கூறியதாவது:
சென்னையில் 700 வீரர்கள்
தீயணைப்புத் துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன் உத்தரவுப்படி, சென்னையில் பட்டாசு விபத்துகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள 700 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பிற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 500 வீரர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வரும் 16, 17, 18, 19 தேதிகளில் பணிகளில் ஈடுபடும் வகையில் 5,500 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
500 வாகனங்கள்
சென்னையின் முக்கிய இடங்களில் 100 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் 400 வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் முதல்முறையாக ‘வாட்டர் பவுசர்’ (Water Bowser) என்ற புதிய வகை தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் இது நிறுத்தப்பட்டுள்ளது.
12,000 லிட்டர் கொள்ளளவு
பிற வாகனங்கள் 4,500 லிட்டர் தண்ணீர் மட்டுமே கொள்ளளவு உடையது. இந்த வாகனம் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடையது. தேவைப்படும் இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தீயணைப்புத் துறை டிஜிபி மகேந்திரனிடம் கேட்டபோது, ‘‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு, மீட்புப் பணிக்காக தீயணைப்புத் துறை வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். முதியோர், நோயுற்றவர்கள் மற்றும் மருத்துவமனை அருகே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது’’ என்றார்.
தமிழகம் முழுவதும் கடந்த தீபாவளியின்போது, ராக்கெட் பட்டாசுகள் மூலம் 446 விபத்துகள், சாதாரண பட்டாசு மூலம் 335 விபத்துகள் என மொத்தம் 781 தீ விபத்துகள் நடந்தன. சென்னையில் 141 தீ விபத்துகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT