Last Updated : 02 Oct, 2017 05:59 AM

 

Published : 02 Oct 2017 05:59 AM
Last Updated : 02 Oct 2017 05:59 AM

வாழ்வியல் கல்வியில் முன்னோடியான மேலராதாநல்லூர் அரசு பள்ளி: வகுப்பறைக்கு வெளியே கற்கும் மாணவர்கள்; களத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள்

ஆசிரியர் என்பவர் போதகர் அல்ல; அவர் மாணவர்களுக்கு வழிகாட்டுபவர், உதவி செய்பவர் என்றார் ஸ்ரீஅரவிந்தர். அவரது கூற்றை நிரூபிக்கும் வகையில் பணியாற்றுகிறார்கள் திருவாரூர் மாவட்டம், மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்.

வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் போதாது; களத்துக்கே சென்று நேரடியாகக் கற்கும் அனுபவக் கல்விதான் சிறந்த மாணவர்களை உருவாக்கும் என இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நம்புகிறார்கள். வகுப்பறைகளுக்கு வெளியே சென்று மாணவர்கள் கற்க பல ஏற்பாடுகளை செய்கின்றனர்.

மருத்துவமனைக்கு பயணம்

மனித உடல் உறுப்புகளின் அமைப்பு மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்தப் பள்ளியின் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடலில் மேற்கொள்ளப்படும் உடற்கூறு பரிசோதனையை நேரடியாக பார்வையிட்டனர். இதயம், கல்லீரல், நுரையீரல், மூளை என மனித உடலின் உள் உறுப்புகளை தங்கள் கையால் எடுத்துப் பார்த்து அவற்றின் அமைப்பு பற்றி தெளிவு பெற்றிருக்கிறார்கள்.

விவசாயம் பற்றிய பாடம் எனில், அருகே உள்ள வயல்வெளிகளுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பயிர்களின் வகைகள், வளரும் காலம், வளரும் விதம் என பல்வேறு அம்சங்கள் பற்றி அவர்களுக்கு நேரடியாக விளக்கம் தரப்படுகிறது. சூழலியல் தொடர்பான பாடம் எனில், ஆறு, குளம், குட்டைகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். நீர்நிலையைச் சார்ந்திருக்கும் தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் பற்றி தெரிந்துகொள்கிறார்கள்.

வேஷம் போடும் ஆசிரியர்

விலங்குகள், பறவைகள் பற்றிய பாடங்கள் நடத்தும்போது, புலி வேஷத்திலோ, சிங்கம் வேஷத்திலோ வகுப்பறையில் தோன்றுகிறார் ஆசிரியர் மணிமாறன். மாணவர்களை மகிழ்ச்சியூட்டி, அவர்களது கவனம் முழுவதையும் தன் மீது திருப்பி, அவர்கள் ஆர்வத்துடன் பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர் அடிக்கடி போடும் கோமாளி வேஷம் மாணவர்களுக்கும், அவருக்கும் நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, பாடங்களில் உள்ள கருத்துகளை மையமாகக் கொண்டு நாடகங்களை தயாரிக்கின்றனர். அந்த நாடகங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து நடிக்கின்றனர்.

திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம், தஞ்சாவூரில் உள்ள தேசிய பயிர் பதன தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் என ஏராளமான உயர் கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்களுக்கு இந்தப் பள்ளியின் மாணவர்கள் அவ்வப்போது அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

வாசிப்பை வளர்க்கும் முயற்சி

மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை வளர்க்க இங்கு பல ஏற்பாடுகள் உள்ளன. 2015-ம் ஆண்டு உலக புத்தக தினத்தின்போது ‘வீட்டுக்கொரு புத்தகம் தாருங்கள்’ என்ற முழக்கத்தோடு பல வீடுகளுக்கு மாணவர்கள் சென்றனர். அந்தப் பயணத்தின்போது சுமார் 500 நூல்கள் சேகரிக்கப்பட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். நூல்களை வாசிப்பது மட்டுமின்றி, அவற்றை விமர்சனம் செய்யவும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. அவ்வப்போது பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். அவர்களது படைப்புகளை மாணவர்கள் படித்துவிட்டு, நூலில் உள்ள கருத்துகள் தொடர்பாக நேரடியாக விவாதம் செய்கின்றனர்.

மாணவர்களிடம் பன்முகத் திறன்களை வளர்க்க தொடர்ந்து பல பயிற்சிகள் தரப்படுகின்றன. குறிப்பாக, மறைந்துபோன மரபு வழி விளையாட்டுகள் தொடர்பாக பயிற்சி தரப்படுகிறது. கதைகள் எழுதுவதற்கான களத்தை அடையாளம் காண்பது, கதை அமைப்பு, கதையின் அளவு முதலானவை பற்றியும்கூட பயிற்சி பெறுகிறார்கள். இதன் பலனாக இதுவரை சுமார் 50 கதைகள் இப்பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

பள்ளியின் செயல்பாடுகள் பற்றி நம்மிடம் பேசிய தலைமை ஆசிரியர் சு.திரிபுரசுந்தரி, “வகுப்பறைகளில் கற்பதைத் தவிர, களத்தில் நேரடியாக கற்பதற்கு நிறைய ஏற்பாடுகள் செய்து தருகிறோம். எங்கள் பள்ளியின் தனித்துவமே இதுதான். இங்கு 8-ம் வகுப்பு முடித்துவிட்டு, அருகே உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்கிறார்கள். அங்கெல்லாம் பிற பள்ளி மாணவர்களைவிட எங்கள் மாணவர்கள் பல அம்சங்களில் தனித்துவமாக இருப்பதை அறிகிறோம். பெற்றோர், கிராமத்தினரின் ஒத்துழைப்பால்தான் மாறுபட்ட சிந்தனையோடு கூடிய கல்வியை எங்களால் அளிக்க முடிகிறது” என்றார்.

ஆசிரியர் செ.மணிமாறன் கூறியதாவது: குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என பெற்றோருக்கு பயிற்சி தருகிறோம். மனித உரிமைக் கல்வி பற்றி மாணவர்களுக்கு சொல்லித் தருகிறோம். பள்ளியில் ‘கருத்து சுதந்திரப் பெட்டி’ என்று ஒரு பெட்டி வைத்துள்ளோம். மாணவர்கள் தங்களது பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் மட்டுமின்றி, பள்ளியின் செயல்பாடு, ஆசிரியர்களின் செயல்பாடு ஆகியவை தொடர்பான தங்களது கருத்துகள், எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்பு, தேவைகளை அறிந்துகொண்டு, அதற்கேற்ப எங்கள் பணிகளைத் திட்டமிட முடிகிறது.

மின்மினி, தும்பி, மண்புழு

காடு, மின்மினி, தும்பி, சின்ன நதி, மண்புழு - இவையெல்லாம் எங்கள் பள்ளியில் உள்ள 5 மாணவர் குழுக்களின் பெயர்கள். இந்தக் குழுவினர் வெவ்வேறு தலைப்புகளில் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவார்கள். உதாரணமாக, தங்கள் சுற்றுப்புறங்களில் தினமும் காணும் பூச்சிகள், அவற்றின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை ஒரு குழுவினர் திரட்டி பதிவு செய்வார்கள். பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக இன்னொரு குழு பணிகளை செய்யும். இதற்காக ஆண்டு முழுவதும் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வார்கள். ஏராளமான புகைப்படங்கள் எடுப்பார்கள். ஆண்டு இறுதியில் தங்கள் அனுபவங்களை ஒர் ஆய்வுக் கட்டுரையாகத் தொகுத்து, கல்லூரி பேராசிரியர்கள் முன்னிலையில் சமர்ப்பிப்பார்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய தெளிவான அறிமுகம் கிடைக்கிறது. சமூகம் பற்றிய புரிதல் ஏற்படுகிறது. வாழ்வின் எந்த கட்டத்திலும் தங்கள் உரிமைகளை இழக்காமல், அதே நேரத்தில் நேர்மையோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை இப்போதே அவர்களிடம் உருவாக்க முடிகிறது.

இவ்வாறு மணிமாறன் கூறினார்.

பல கல்லூரி மாணவர்களுக்குகூட கிடைக்காத வாழ்வியல் கல்வி, இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கிறது. ஸ்ரீஅரவிந்தரின் கூற்றுப்படி மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மேலராதாநல்லூர் போன்ற ஆச்சரியப் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது நிச்சயம்!

பள்ளியின் செயல்பாடுகள் பற்றி மேலும் அறிய: 9952541540 மற்றும் 9487171270.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x