Published : 26 May 2023 06:24 AM
Last Updated : 26 May 2023 06:24 AM
சென்னை: தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் அது தீவிரமாகக் கருதப்படும் எனவும் உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீது என்ஐஏ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள என்ஐஏ, மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தது. அந்த மனு
நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை கோரியும் வழக்கறிஞர் முகமது அப்பாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி, லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “என்ஐஏ-க்கு எதிராக முகநூலில் சில கருத்துகளை தெரிவித்ததற்காகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரானதற்காகவும் மனுதாரரைக் கைது செய்துள்ளனர். எனவே, இந்த
விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
அதையடுத்து என்ஐஏ தரப்பில் வாதிடும்போது, “போதிய ஆதாரங்கள் கிடைத்ததால்தான் மனுதாரர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆதாரங்கள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.தீவிரமாக எடுத்துக்கொள்வோம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்துவிட்டு, அந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே, அரிவாள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்தால் அதை இந்த நீதிமன்றம் தீவிரமாக கருதும்" என எச்சரிக்கை விடுத்தனர்.
அத்துடன், ‘‘என்ஐஏ தரப்பு விளக்கத்தை கேட்காமல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது’’ எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி என்ஐஏ.வுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT