Published : 26 May 2023 06:01 AM
Last Updated : 26 May 2023 06:01 AM
சென்னை: சிங்கப்பூர் சட்ட அமைச்சர் சண்முகத்தை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது வேண்டுகோளை ஏற்று மதுரை -சிங்கப்பூர் நேரடி விமான சேவை தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தமிழகத்தில் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுடன் தமிழகத்துக்கு உள்ள பொருளாதார மற்றும்
வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த
நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 23-ம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்துப் பேசினார். பின்னர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். இதேபோல, சிங்கப்பூர் உள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தை நேற்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பின்போது, கொள்முதல் அமைப்புகளை மதிப்பிடும் முறை, தமிழக தொழில்கள், சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணைய பாதுகாப்பை மேம்படுத்தல், மாநில நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், தரவு தனியுரிமை அம்சங்கள் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள் மற்றும் தமிழக காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை குறித்து, முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர் கே.சண்முகம், உரை யாடினார்.
மேலும், ‘‘சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சண்முகம் கோரிக்கை விடுத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், ‘‘இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழறிஞருடன் சந்திப்பு: தொடர்ந்து, சிங்கப்பூர் வாழ் தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன், முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திண்ணப்பன், அண்ணாமலை பல்கலைக்கழகம், அதிராம்பட்டினம் கல்லூரி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளார்.
முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் சுப.திண்ணப்பன் கூறும்போது, ‘‘எனக்கு தமிழ் படிக்கும் ஆர்வம், அண்ணா மற்றும் கருணாநிதியால்தான் வந்தது. திருவாரூரில் நான் படிக்கும் போதுதான் முதன்முதலில் கருணாநிதி உரையைக் கேட்டேன். அப்போதுதான் எனக்கு தமிழ் உணர்வு வந்தது. தமிழ் ஆசிரியர், தமிழ் பேராசிரியராகும் வேட்கையும் வந்தது. தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பாராட்டுக்குரியவை’’ என்றார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘தமிழும், தமிழர் நலமும் காக்கும் அரசின் பணிகளை அவர் பாராட்டினார். தமிழ்ப் பண்பாட்டை உலகுக்கு காட்சிப்படுத்தும் கீழடி அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பொருநை அருங்காட்சியகமும் சிறப்பாக அமைய வாழ்த்தினார். சில கோரிக்கைகளை முன்வைத்தார். அவற்றில் சிலவற்றை அரசு ஏற்கெனவே செயல்படுத்தி வருவதை தெரிவித்து, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம் என்று உறுதியளித்தேன். கருணாநிதியின் மகனான நான், சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என நம்புவதாக அவர் தெரிவித்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். (அடுத்த படம்) தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, சிங்கப்பூர் வாழ் தமிழர் சுப.திண்ணப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT