Published : 26 May 2023 04:56 AM
Last Updated : 26 May 2023 04:56 AM

மே 28-ல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 234 தொகுதியிலும் ஏழைகளுக்கு இலவச மதிய உணவு

சென்னை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 234 தொகுதியிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளா உட்பட மேலும் 5 மாநிலங்களிலும் இதனை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம் எப்போது அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் நீடித்து வருகிறது. அரசியலுக்கு வருவதாக இதுவரை வெளிப்படையாக விஜய் பொதுவெளியில் சொல்லாமல் இருந்தாலும், அவரது மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் விரைவில் விஜய் அரசியல் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளன.

அவ்வப்போது, மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் அழைத்து, பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கும் விஜய், அவர்களுக்கு இயக்கத்தை விரிவுப்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அம்பேத்கர் பிறந்தநாளன்று, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததும், இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலமாகவும், விஜய் அரசியலுக்கு வருவதற்கான பணிகளை தொடங்கி விட்டார் என்ற பேச்சுகள் எழத் தொடங்கி விட்டன.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தல், அடுத்து வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்களை நிறுத்துவதற்காக, தொகுதி வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சர்வே நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, இளம் தலைமுறையினரின் வாக்குகளைப் பெறத்திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை விஜய் மக்கள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 234 தொகுதிகளிலும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை விஜய் சந்தித்து, அவர்களுக்கு தேவையான கல்வி உதவியை செய்ய இருப்பதாக சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது, அதை உறுதி செய்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக மே 28-ம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பட்டினியால் வாடும் மக்களுக்கு ஒரு நாள் மதிய உணவு வழங்க இருப்பதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் மே 28-ம் தேதி காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு வேளை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x