Published : 26 May 2023 04:33 AM
Last Updated : 26 May 2023 04:33 AM

ஆவின் நிறுவனத்தைப் பாதிக்கும் வகையிலான பால் கொள்முதலை ‘அமுல்’ நிறுத்த வேண்டும்: அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதையும், பால் கொள்முதல் செய்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான அமுல் நிறுவனம், இதுவரை தங்களது தயாரிப்புகளை தமிழகத்தில் உள்ள அவர்களது விற்பனைநிலையங்கள் வாயிலாக மட்டுமே மேற்கொண்டுவந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால், பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழகத்திலும் ஊரகப்பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக, கடந்த 1981-ம் ஆண்டு முதல் மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்படச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆவின் நிறுவனம், தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாகச் செயல்பட்டு வருகிறது.

தமிழக கிராமப்புறங்களில் ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த சங்கங்கள் தினமும் 35 லட்சம் லிட்டர் பாலை, 4.50 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் லாபகரமான மற்றும் சீரான
விலை, கூட்டுறவு சங்கங்களால் உறுதிசெய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும் உதவுவதுடன், பால் உற்பத்தியாளர்களுக்கு கால் நடைத் தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவை மற்றும் இடுபொருட்களை வழங்கி வருகிறது.

அத்துடன், தரமான பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச்சத்தைப் பூர்த்தி செய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது.

இந்நிலையில், அமுல் நிறுவனம், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்குள், ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், அமுல் நிறுவனத்தின் எல்லை தாண்டிய கொள்முதல் ‘வெண்மைப் புரட்சி’ கொள்கைக்கு எதிராக அமைந்துள்ளது. அதேபோல, நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோருக்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல, பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து, விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்.

எனவே, தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x