Last Updated : 26 May, 2023 04:03 AM

 

Published : 26 May 2023 04:03 AM
Last Updated : 26 May 2023 04:03 AM

ஆன்லைனில் இழந்த 82 ஆயிரம் ரூபாயை உடனடியாக மீட்ட சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார்

சிவகங்கை: காரைக்குடி இளைஞர் ஆன்லைனில் இழந்த ரூ.82,000-த்தை சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார் உடனடியாக மீட்டனர்.

காரைக்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (24). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என விளம்பரம் இருந்தது. இதையடுத்து ராமமூரத்தி முதலில் குறைவான பணத்தை முதலீடு செய்துள்ளார். அவரது பணம் இரட்டிப்பானது. இதனால் சந்தோஷம் அடைந்த ராமமூர்த்தி பணத்தை எடுக்காமல் தொடர்ந்து 16 தவணைகளில் ரூ.82,400 வரை முதலீடு செய்தார். ஆனால் அதன்பிறகு அந்த பணத்தை எடுக்க முடியவில்லை.

இதையடுத்து அவர் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்தா்.
தொடர்ந்து மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான சைபர் கிரைம் போலீஸார் உடனடியாக செயல்பட்டு, பணபரிவர்த்தனை நடத்த வங்கி கணக்கை முடக்கினர். தொடர்ந்து வங்கி அதிகாரிகளிடம் பேசி வங்கி கணக்கில் இருந்து ரூ.82,400-யை மீட்டு ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட சைபர் கிரைம் போலீஸாருக்கு வெகுமதி அளித்து எஸ்பி பாராட்டினார். மேலும் ஆன்லைன் மோசடி குறித்து உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் செய்தால், உடனடியாக குற்றவாளிகளின் வங்கி கணக்கை முடக்கி, பணத்தை மீட்க முடியும் என சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.

சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் ஆன்லைனில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி செல்வராஜ். அருகில் சைபர் கிரைம் போலீஸார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x