Published : 25 May 2023 06:36 PM
Last Updated : 25 May 2023 06:36 PM
காரைக்குடி: “பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல் இல்லாமல் சுயமரியாதையாக வாழ வேண்டும்” என மணமக்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
உதயநிதி கட்சி நிர்வாகிகள் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க இன்று சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தார். அவரை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வரவேற்றனர். தொடர்ந்து உதயநிதி குன்றக்குடி மடத்தில் பொன்னம்பல அடிகளாரிடம் ஆசி பெற்றார். அங்குள்ள குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் அடிகளார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
அப்போது அவரிடம் மணிமண்டபத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டி, அவரே திறந்து வைத்ததையும் பொன்னம்பல அடிகளார் நினைவு கூர்ந்தார். மேலும் அங்கிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதியுடன் குன்றக்குடி அடிகளார் இருந்த புகைப்படங்களை காட்டி, அவர்களுடனான அடிகளாரின் நெருக்கமான நட்பு குறித்தும் விளக்கினார். சிறுகூடல்பட்டி சமத்துவபுரத்தில் சிறுவர் பூங்கா அமைத்ததற்கு, அப்பகுதி சிறுவர்கள் உதயநிதிக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் குன்றக்குடியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசுகையில், ''திராவிட மாடலை இந்தியாவுக்கே சிறந்த மாடலாக முதல்வர் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். அதுபோல மணமக்கள் வாழ வேண்டும்” என்று பேசினார். தொடர்ந்து தேவகோட்டை கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசுகையில், “பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல் இல்லாமல், இபிஎஸ்ஸா, ஓபிஎஸ்ஸா என குழாயடி சண்டையிடாமல் வாழ்க்கையில் விட்டு கொடுத்தும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்'' என்று பேசினார். அமைச்சர்கள் ரகுபதி, ம.சுப்பிரமணியன், மெய்யநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT