Published : 25 May 2023 03:54 PM
Last Updated : 25 May 2023 03:54 PM

“சிங்கப்பூரை சுற்றிப் பார்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை” - முதல்வரின் பயணம் குறித்து சீமான் விமர்சனம்

குன்றத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

சென்னை: "சிங்கப்பூரை சுற்றிப் பார்க்கலாம், ஜப்பானை சுற்றிப் பார்க்கலாம் அதைத் தவிர ஒன்றும் இல்லை. முதல்வர் உட்கார்ந்திருக்கிறார், அந்தப் பக்க நாற்காலிகள் எல்லாம் காலியாக கிடக்கிறது. முதலீடுகளை கேட்டு நாற்காலியைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறாரா முதல்வர்?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமா நகரில் தனியார் நிறுவனத்திற்காக திமுக அரசு அப்பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளை இடிப்பதனால் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாழக்கிழமை கலந்துகொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், முதல்வரின் சிங்கப்பூர் பயணம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "சிங்கப்பூர் மொத்த நாடையும் சுற்றிப்பார்க்க 45 நிமிடம்தான் தேவைப்படும். சென்னையில் பாதியளவுகூட கிடையாது. தமிழ்நாட்டில் ஒரு இரண்டு மாவட்டங்களின் அளவுதான் இருக்கும்.

அந்த நாட்டில் எந்த வளமும் கிடையாது. கடல் மட்டும்தான் இருக்கும். மரங்கள்கூட இல்லாத நாட்டிற்கு கப்பலில் வேரோடு மரங்கள் கொண்டுவந்து நடப்படும். அந்த நாட்டில், மலைவளம், கடல்வளம், நீர்வளம், காட்டு வளம், மனிதவளம் என அனைத்தையும் கொண்டுள்ள தமிழ்நாடு, சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டிற்குச் சென்று எங்களுக்கு முதலீடு செய்வதற்கு முதலாளிகளை அனுப்புமாறு கேட்பது என்பது ஓர் இனத்தை, ஒரு நாட்டை அவமதிப்பதாகும்.

திராவிடக் கட்சிகள் 60-70 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு சின்னஞ்சிறிய நாடான சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்து முதலீட்டாளர்களைக் கொண்டு வரப்போவதாக கூறுவது அவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது. 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்று கூறுகிறார்கள். 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது எனக்குப் புரிகிறது. அது எந்த மாதிரியான புரிந்துணர்வு ஒப்பந்தம், என்னென்ன ஒப்பந்தங்கள் என்று கூறுங்கள். குறைந்த கட்டணத்தில் தடையற்ற மின்சாரம், நிலத்தடி நீர் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எத்தனை ஆயிரம் நிலங்களை வேண்டுமானாலும் அரசே எடுத்து தரும்.

ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் மின்தடை ஏற்பட்டு உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டால், அதை மத்திய மாநில அரசுகள் ஈடுகட்டும் என்று ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால், மக்கள் 8லிருந்து 9 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருக்கிறோம். நாங்கள் செலுத்தும் மின் கட்டணத்திற்கும், இந்த அந்நிய தொழிற்சாலைகளின் முதலாளிகள் செலுத்துகின்ற மின் கட்டணத்துக்கும் ஒன்றாக இருக்கிறதா? என்றால் இல்லை. மக்கள் செலுத்துவதைவிட அவர்கள் பலமடங்கு குறைவாக செலுத்துகின்றனர்.

அப்படியென்றால், யாருக்கான நாடு? யாருக்கான கட்டமைப்புகள் இங்கு கட்டமைக்கப்படுகிறது? வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவது மக்களின் சேவைக்கா? அல்லது அவர்களது தேவைக்கா? ஹுண்டாய் வந்தது, அங்கு எத்தனை தமிழக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது? இதே திமுக ஆட்சியில்தான் நோக்கியா வந்தது, நோக்கியா தொழிற்சாலை இப்போது எங்கே? மூடிச் சென்றுவிட்டனர். அங்கு வேலை செய்த இளைஞர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது.

தனிபெரும் முதலாளிகள் வாழ்வதற்கும் அவர்கள் வளர்வதற்குமே திட்டங்களையும், சட்டங்களையும் இயற்றிக்கொண்டிருப்பதை வளர்ச்சி என்று பேசுவது பைத்தியக்காரத்தனம். எனவே முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வதை வேடிக்கையாகத்தான் பார்க்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. ஆனால், முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். இரண்டு லட்சம் கோடி முதலீடு வருவதாக கூறினார். எங்கே வந்தது? அவர் இறந்த 6-7 ஆண்டுகளாகிவிட்டது. திமுகவினர் கடந்த ஆண்டு துபாய், அரபு நாடுகள் எல்லாம் சுற்றி முதலீடு வருவதாக கூறினார்கள். வந்திருந்தால், எந்தெந்த துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது? எத்தனை ஆயிரம் பேருக்கு அதில் வேலை கிடைத்திருக்கிறது?

சிங்கப்பூரை சுற்றிப் பார்க்கலாம், ஜப்பானை சுற்றிப் பார்க்கலாம், அதைத் தவிர ஒன்றும் இல்லை. முதல்வர் உட்கார்ந்திருக்கிறார், அந்த பக்க நாற்காலிகள் எல்லாம் காலியாக கிடக்கிறது. முதலீடுகளை கேட்டு நாற்காலியைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறாரா முதல்வர் விமான டிக்கெட், போக்குவரத்து செலவும் எல்லாம் தண்டம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x