Published : 25 May 2023 04:44 AM
Last Updated : 25 May 2023 04:44 AM
சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில், புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களை விற்பதும், பதுக்குவதும், கொண்டுசெல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
உடல்நலத்துக்கு கேடு: குறி்பபாக, புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013-ம் ஆண்டில் இதற்கான தடை கொண்டு வரப்பட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: குட்கா, பான்மசாலா போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பொருட்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதால் தடை செய்யப்பட வேண்டும். இதற்கான உத்தரவை கடந்த 2016-ம்ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
இதன்படி குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட் களை தயாரித்தல், பதுக்கி வைத்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையானது மேலும் ஓராண்டுக்கு அதாவது வரும் 2014-ம் ஆண்டு மே 23-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு மேல்முறையீடு: முன்னதாக, மெல்லும் புகையிலைப் பொருட்கள் மீது உணவு பாதுகாப்பு ஆணையர் விதித்த தடையை கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே, குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவற்றுக்கான தடை நீடிப்பதாக உணவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தடைக்கான கால அவகாசம் முடிந்ததால், மேலும் ஓராண்டுக்கு தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT